ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மும்பை கோர்ட்டில் ஆஜர் : ஜாமீன் வழங்கி உத்தரவு
ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி ஆகியோர் மும்பை கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள். அவர்களுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மும்பை,
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 2017–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டின் முன் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவுடன் தொடர்புபடுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் பேசியதாக கூறப்படுகிறது.
இதில் ராகுல் காந்தி, அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி மற்றும் சீதாராம் யெச்சூரி, அவரை சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மீது மும்பையை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர் துருதிமான் ஜோஷி என்பவர் மும்பை மஜ்காவ்–சிவ்ரி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான மனுவில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவின் கொள்கைகளுக்கு எதிராக பேசுபவர்கள் தாக்கப்படுகின்றனர், துன்புறுத்தப்படுகின்றனர், கொலை செய்யப்படுகின்றனர் என கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் ராகுல் காந்தி பேசியதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மற்றும் அவர்களது கொள்கைகள்தான் கவுரி லங்கேஷ் கொலைக்கு காரணம் என சீதாராம் யெச்சூரி சொன்னதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரிக்கு உத்தரவிட்டு இருந்தது. மேலும் தனிநபரின் கருத்துகளுக்கு கட்சி பொறுப்பாகாது என கூறி சோனியா காந்தியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியையும் வழக்கில் இருந்து விடுவித்தது. இந்த வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டதின் பேரில் ராகுல் காந்தி மற்றும் சீதாராம் யெச்சூரி ஆகியோர் நேற்று காலை மும்பை சிவ்ரி கோர்ட்டில் ஆஜரானார்கள்.
அப்போது மாஜிஸ்திரேட்டு, உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறீர்களா? என 2 பேரையும் பார்த்து கேட்டார். ஆனால் ராகுல் காந்தியும், சீதாராம் யெச்சூரியும் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்தனர். மேலும் வழக்கு மீதான விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மாஜிஸ்திரேட்டு தலா ரூ.15 ஆயிரம் பிணை தொகையுடன் 2 பேருக்கும் ஜாமீன் வழங்கினார். மேலும் அடுத்து நடைபெறும் வழக்கு விசாரணைகளின்போது நேரில் ஆஜர் ஆவதில் இருந்து 2 பேருக்கும் விலக்கு அளிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 22–ந் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
ராகுல் காந்தி வருகையையொட்டி நேற்று மும்பை கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ராகுல்காந்தி மீது பல்வேறு அவதூறு வழக்குகள் : கோர்ட்டு படியேறி இறங்குகிறார்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ராகுல்காந்தி ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மும்பை கோர்ட்டில் ஆஜரானார். அவர் மீது இதுமட்டுமின்றி மேலும் சில அவதூறு வழக்குகளும் உள்ளன. அதற்காக அவர் கோர்ட்டின் படியேறி இறங்கி வருகிறார்.
குறிப்பாக மகாத்மா காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை தொடர்புபடுத்தி பேசியதற்காக ராகுல்காந்தி மீது மராட்டியத்தின் தானே மாவட்டம் பிவண்டி கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் ஆஜரானார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கர்நாடகத்தில் பிரசாரத்தின்போது, நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என மோடி பெயரை கொண்டவர்கள் எல்லாம் திருட்டு தனத்தில் ஈடுபடுவதாக ராகுல்காந்தி பேசினார். இதையடுத்து பா.ஜனதா தலைவரும், பீகார் மாநில துணை முதல்-மந்திரியுமான சுசில்குமார் மோடி பாட்னா கோர்ட்டில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் நாளை(சனிக்கிழமை) ஆஜராக உள்ளார்.
மேலும் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் மற்றும் சூரத் கோர்ட்டுகளிலும் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. அந்த வழக்குகளிலும் அவர் ஆஜராக உள்ளார்.
ராகுல்காந்தி ராஜினாமாவை திரும்ப பெற வலியுறுத்தி தொண்டர்கள் கோஷம் : கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு
ராகுல் காந்தி நேற்று மும்பை கோர்ட்டுக்கு வந்தபோது கோர்ட்டு எதிரே காங்கிரஸ் தொண்டர்கள் அதிகளவில் திரண்டனர்.
அவர்கள், ராகுல் காந்தி ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் என்ற பதாகைகளை கையில் வைத்து இருந்தனர். காலை 10.30 மணிக்கு ராகுல் காந்தி காரில் கோர்ட்டுக்கு வந்தார். அப்போது அங்கு இருந்த தொண்டர்கள் ராகுல் காந்தி ராஜினாமாவை திரும்ப பெறவேண்டும் என கோஷம் எழுப்பி கொண்டே அவரை பார்க்க முண்டியடித்து சென்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாருடன் காங்கிரஸ் தொண்டர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் ராகுல்காந்தி கூடியிருந்த தொண்டர்களுக்கு கைகொடுத்துவிட்டு கோர்ட்டுக்குள் சென்றார்.
இதையடுத்து போலீசார் தொண்டர்களை அங்கு இருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். எனினும் அவர்கள் அங்கு இருந்து செல்ல மறுத்து ராகுல் காந்தி ராஜினாமாவை வாபஸ் பெற வேண்டும் என கோஷம் எழுப்பி கொண்டே இருந்தனர். அந்த சமயத்தில் பெய்த மழையையும் அவர்கள் பொருட்படுத்தாமல் ராகுல் காந்தி கோர்ட்டில் இருந்து வெளியே வரும் வரை சுமார் 1 மணி நேரம் காத்திருந்தனர். இதுகுறித்து தொண்டர் ஒருவர் கூறும்போது, ‘ராகுல் காந்தி ராஜினாமா செய்யக்கூடாது. என்ன நடந்தாலும் பிரச்சினை இல்லை. அவர் தான் எப்போதும் எங்களின் தலைவர்’ என கூறினார்.