11 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய ஆளுநர் மாளிகை நோக்கி பயணம் -கர்நாடக அரசியலில் பரபரப்பு
கர்நாடகாவில் 11 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளதால் அங்கு பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிகோளி ஆகிய 2 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதில் ரமேஷ் ஜார்கிகோளியின் ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகர் கூறியுள்ளார்.
ஆனந்த்சிங்கின் ராஜினாமா கடிதம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இந்த நிலையில் சபாநாயகர் ரமேஷ்குமாரை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், காங்கிரஸ் செயல்தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, சுகாதாரத்துறை மந்திரி சிவானந்தா பட்டீல் ஆகியோர் பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், ஆனந்த்சிங்கின் ராஜினாமாவை அங்கீகரிக்க வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில், திடீரென சபாநாயகரை சந்திக்க காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்களும் தலைமைச்செயலகம் சென்றனர். அங்கு சபாநாயகர் அறையில் இல்லாததால், ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர். 11 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்கப்பட்டால் ஆட்சி கவிழும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து அவசர கூட்டத்துக்கு அம்மாநில துணை முதல்-மந்திரி அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ள அம்மாநில முதல்-மந்திரி குமாரசாமி நாளை மறுநாள் கர்நாடகா திரும்ப உள்ள நிலையில் கர்நாடகாவில் அரசியல் குழப்பம் அதிகரித்துள்ளது.
ஓருவேளை இந்த எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தால், பாஜக அதிக பெரும்பான்மை பெரும் சூழல் உருவாகியுள்ளது.
எடியூரப்பா மக்களவை தேர்தல் முடிந்த ஒரு மாதத்தில் கர்நாடகாவில் ஆட்சி அமைப்போம் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story