இந்தியாவில் 17 சதவீத நகர்ப்புறங்களில் தண்ணீர் தட்டுப்பாடு; தமிழகத்தில் அதிகம் - மத்திய அரசு தகவல்
இந்தியாவில் 17 சதவீத நகர்ப்புறங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகள் தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வருகின்றன. இந்தநிலையில், தண்ணீர் பிரச்சினையால் அவதிப்படும் நகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களின் பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தமுள்ள 4 ஆயிரத்து 378 நகரங்களில், 756 நகரங்களில் நீர் பற்றாக்குறை உள்ளதாக நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமும், ஜலசக்தி அமைச்சகமும் பட்டியலிட்டுள்ளது.
அதிகபட்சமாக தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள 184 நகர்ப்புற பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 111 நகர்ப்புறங்களிலும், உத்தரபிரதேசத்தில் 84 நகர்ப்புறங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டுக்குள் சென்னை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் 21 நகரங்களில் நிலத்தடி நீர் என்பதே இருக்காது என்று நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. மேலும் 2030-ம் ஆண்டுக்குள் 30 சதவீத மக்களுக்கு குடிநீர் கிடைக்காது என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அதில், அதிக நீர்ப்பற்றாக்குறை நகரங்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தை அடுத்தே ராஜஸ்தான் இடம் பெற்றுள்ளது. மூன்றாம் இடத்தில் நாட்டிலேயே அதிக மக்கள் தொகை உள்ள உத்தரபிரதேசம் இடம் பெற்றுள்ளது.
மழை நீரை சேமிக்கும் வசதியுள்ள புதிய கட்டிடங்களுக்கே குடியேறுவதற்கான அனுமதி அளித்தல், மழை நீர் சேகரிப்பை அமல்படுத்த உத்தரவிடுவதோடு அதை திறம்பட கண்காணித்தல், நீர்நிலைகளை தூர்வாருதல், நீரை சுத்திகரித்தல் மற்றும் மறுசுழற்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story