உறவினரின் குழந்தையை நரபலி கொடுக்க முயன்று தனது மகனை இழந்த அறிவியல் ஆசிரியை


உறவினரின் குழந்தையை நரபலி கொடுக்க முயன்று தனது மகனை இழந்த அறிவியல் ஆசிரியை
x
தினத்தந்தி 8 July 2019 3:02 PM IST (Updated: 8 July 2019 3:02 PM IST)
t-max-icont-min-icon

குழந்தை ஒன்றை நரபலி கொடுக்க முயன்ற பள்ளி ஆசிரியை ஒருவர் அவரின் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அசாம் மாநிலத்தில் நடந்துள்ளது.

கவுகாத்தி,

அசாமின் உடால்குரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் போலி சாமியாருடன் சேர்ந்து தனது மைத்துனியின்  3 வயது குழந்தையை நரபலி கொடுக்க முயன்றுள்ளார். கடந்த ஒருவார காலமாக இரவு நேரங்களில் 4 ஆண்கள், 3 பெண்கள், ஒரு சாமியார் ஆகியோருடன் இணைந்து இந்த ஆசிரியையின் குடும்பம் சந்தேகத்திற்கிடமான வகையில் பூஜைகள் செய்துள்ளது. 

நேற்று இரவு திடீரென அவர்கள் வீட்டிலிருந்து புகை வெளிவந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் உள்ளே எட்டிப்பார்த்துள்ளார். அப்போது அவர்கள் 3 வயதான அவர்கள் உறவினரின் குழந்தையை கட்டிவைத்து, அந்த குழந்தையை பலியிட தயார் செய்துள்ளனர். இதனை கண்ட அந்த இளைஞர் காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் வீட்டின் உள்ளே நுழைய முயற்சித்த போது, அந்த ஆசிரியையின் குடும்பத்தார் காவல்துறையினர் மீது கற்களை கொண்டு தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் எச்சரித்தும் அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில், காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சாமியாருடன் இருந்த 3 ஆண்கள் காயமடைந்தனர். இதனையடுத்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காயம் அடைந்த  ஆசிரியையின்  கணவர் ஜதவ் சகாரியா, மகன் புலகேஷ் சகாரியா உள்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஆசிரியையின் மகன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

அந்த பகுதியில் உள்ள பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணியாற்றும் அந்த பெண், தன் குடும்ப நலனுக்காக  உறவினரின்  குழந்தையை பலியிட முயற்சித்தார். இதன் எதிர்ப்பு சம்பவத்தில் ஆசிரியையின் மகனே பலியாகி உள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Related Tags :
Next Story