மசூதிகளில் முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


மசூதிகளில் முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 July 2019 1:59 AM GMT (Updated: 9 July 2019 1:59 AM GMT)

மசூதிகளில் முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

புதுடெல்லி, 

அகில பாரத இந்து மகாசபா அமைப்பின் கேரளா கிளையின் தலைவர் சுவாமி தத்தாத்ரேய சாயி ஸ்வரூப் நாத் என்பவர் கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மசூதிகளில் முஸ்லிம் பெண்களுக்கும் தொழுகை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து கொள்ளும் பர்தா முகத்திரை வழக்கத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை விசாரித்த கேரள ஐகோர்ட்டு இந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக சுவாமி தத்தாத்ரேய சாயி ஸ்வரூப் நாத் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.

விசாரணை தொடங்கியதும், இந்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், கேரள ஐகோர்ட்டு தீர்ப்பில் இந்த மனு வெறும் விளம்பரத்துக்காக மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறியதையும் சுட்டி காட்டினார்கள்.

மேலும், ஒரு முஸ்லிம் பெண்மணி முன்வரட்டும். நாங்கள் மனுவை பரிசீலனைக்கு எடுத்து கொள்கிறோம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.

Next Story