தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ராஜினாமா


தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ராஜினாமா
x
தினத்தந்தி 9 July 2019 5:28 PM IST (Updated: 9 July 2019 5:28 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களையே பெற்று படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித்தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அவர் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். இதற்கிடையே பிற தலைவர்களும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து வருகிறார்கள். தேர்தலில் மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 2 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா, அப்போதே பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஆனால், சக நிர்வாகிகள் அதற்கு உடன்படவில்லை.

இந்நிலையில், ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருப்பதால், சோமன் மித்ராவும் தனது ராஜினாமா கடிதத்தை மேலிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரை மேற்கு வங்காள காங்கிரஸ் விவகாரத்தை கவனிக்கும் மேலிட பொறுப்பாளர் கவுரவ் கோகாய் நேரில் சந்தித்தார். மித்ராவின் ராஜினாமா ஏற்கப்படவில்லை என்றும், தொடர்ந்து பணியாற்றுமாறும் கேட்டுக்கொண்டார். புதிய தேசிய தலைவர், மாநில கமிட்டிகளை மாற்றி அமைக்கும்போது, மாநில தலைவர்களை மாற்றுவது பற்றியும் முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Next Story