காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி பாத யாத்திரை செல்லுங்கள் பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு
மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோரது பிறந்தநாளையொட்டி பாத யாத்திரை செல்லுமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோரது பிறந்தநாளையொட்டி பாத யாத்திரை செல்லுமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
எம்.பி.க்கள் கூட்டம்நாடாளுமன்ற பா.ஜனதா கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், இரு அவைகளின் பா.ஜனதா எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:–
மகாத்மா காந்தி பிறந்தநாள், அக்டோபர் 2–ந் தேதியும், சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் அக்டோபர் 31–ந் தேதியும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, மக்களவை பா.ஜனதா எம்.பி.க்கள் அவரவர் தொகுதிகளில் பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.
பாத யாத்திரைஅக்டோபர் 2–ந் தேதிக்கும், அக்டோபர் 31–ந் தேதிக்கும் இடையே 150 கி.மீ. தூரம் பாத யாத்திரை செல்ல வேண்டும். அதுபோல், மாநிலங்களவை பா.ஜனதா எம்.பி.க்கள், பா.ஜனதா பலவீனமாக உள்ள தொகுதிகளில் பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.
கிராமங்களுக்கு புத்துயிரூட்டுதல், அவற்றை சுயசார்பு உள்ளதாக ஆக்குதல், மரக்கன்று நடுதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டதாக பாத யாத்திரை அமைய வேண்டும். நமது தேர்தல் அறிக்கையில் கூறியவை எல்லாம், நமது எதிர்கால தொலைநோக்கு பார்வையில் பிரதிபலிக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களிடம் கூறினார்.
இந்த கூட்டத்தில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் பற்றி பேசினார்.