அமித்ஷா பற்றி அவதூறான கருத்து: குஜராத் கோர்ட்டு ராகுல் காந்திக்கு மீண்டும் சம்மன்
குஜராத் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பா.ஜனதா பிரமுகர் கிருஷ்ணாவதன் என்பவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
ஆமதாபாத்,
குஜராத் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பா.ஜனதா பிரமுகர் கிருஷ்ணாவதன் என்பவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அதில், ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷாவை கொலை குற்றவாளி என்று கூறினார். சொராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டால் அமித்ஷா விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் மாஜிஸ்திரேட்டு ஏற்கனவே கடந்த மே 1–ந் தேதி ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பினார். அவர் எம்.பி. என்பதால் சபாநாயகருக்கு அந்த சம்மனை அனுப்பினார். ஆனால் சபாநாயகர், இதில் தலையிட தனக்கு உரிமை இல்லை என்று திருப்பி அனுப்பிவிட்டார். இதனால் மாஜிஸ்திரேட்டு நேற்று மீண்டும் புதிய சம்மனை ராகுல் காந்தியின் வீட்டுக்கு அனுப்பினார். அதில் ஆகஸ்டு 9–ந் தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார்.