நீதிபதிகள் காலியிடம் பற்றி அனைத்து மாநிலங்களும் தெரிவிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


நீதிபதிகள் காலியிடம் பற்றி அனைத்து மாநிலங்களும் தெரிவிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 July 2019 3:00 AM IST (Updated: 10 July 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

நீதிபதிகள் காலியிடம் பற்றி அனைத்து மாநில சட்டத்துறை செயலாளர்கள், ஐகோர்ட்டுகளின் பதிவாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி, 

நீதிபதிகள் காலியிடம் பற்றி அனைத்து மாநில சட்டத்துறை செயலாளர்கள், ஐகோர்ட்டுகளின் பதிவாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் காலியிடங்கள்

கடந்த ஆண்டு அக்டோபர் 22–ந் தேதி அனைத்து மாநிலங்களிலும் உள்ள கீழ்க்கோர்ட்டுகளில் சுமார் 5 ஆயிரம் நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டது. இதில் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவுவதற்காக மாநிலங்கள் வாரியாக வக்கீல்களையும் நியமித்தது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

செயலாளர்கள் ஆஜராக வேண்டும்

அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவது குறித்து மாநில அரசுகள், ஐகோர்ட்டுகளின் பதிவாளர்கள் சுப்ரீம் கோர்ட்டின் பதிவாளர் ஜெனரலுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு கோர்ட்டுகளிலும் இருக்க வேண்டிய நீதிபதி பணியிடங்கள் எத்தனை, அதில் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது, காலியாக உள்ள இடங்கள் எத்தனை, அதனை நிரப்புவதற்கான பணிகள் எந்த நிலையில் உள்ளது, நிரப்பும் பணிகள் எப்போது நிறைவுபெறும் என்பதை விளக்கமாக தெரிக்க வேண்டும். ஜூன் 30–ந் தேதி உள்ள நிலவரப்படி இந்த தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

அனைத்து மாநில சட்டத்துறை செயலாளர்கள், ஐகோர்ட்டுகளின் பதிவாளர்கள் ஆகியோர் ஜூலை 30–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி இந்த தகவலை தெரிவிக்க வேண்டும்.

நிதி ஒதுக்கீடு

அதேபோல சார்பு நீதிமன்றங்களின் உள்கட்டமைப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு குறித்து சொலிசிட்டர் ஜெனரல் (துஷார் மேத்தா) தகவல் தெரிவிக்க வேண்டும். இதுபற்றி மத்திய அரசின் உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தகவல்களை பெற்றுத்தருவதற்கு அவருக்கு ஜூலை 31–ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story