கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி பதவி விலகி பா.ஜ.க. அரசு அமைக்க வழிவிட வேண்டும்; எடியூரப்பா பேட்டி


கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி பதவி விலகி பா.ஜ.க. அரசு அமைக்க வழிவிட வேண்டும்; எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 10 July 2019 1:08 PM IST (Updated: 10 July 2019 1:08 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி பதவி விலகி பா.ஜ.க. அரசு அமைக்க வழிவிட வேண்டும் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், சபாநாயகரை தவிர்த்து, காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 118 உறுப்பினர்கள் உள்ளனர்.  எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேர், ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 பேர் என 14 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். இவர்கள் தனி விமானம் மூலம் மும்பை அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பாரதீய ஜனதா செய்ததாக காங்கிரஸ்–ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.  இதன் காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், குமாரசாமி அரசை, கவிழாமல் காப்பாற்ற காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மந்திரிகளாக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான எச்.நாகேசும், ஆர்.சங்கரும் நேற்று முன்தினம் வாபஸ் பெற்றனர். இதற்கான கடிதத்தை கவர்னர் வஜூபாய் வாலாவிடம் அவர்கள் வழங்கியுள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.

இதனால் கூட்டணி ஆட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 104 ஆக குறைந்துவிட்டது. அதே வேளையில் பா.ஜனதாவின் பலம் 107 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து, காங்கிரசில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான ரோஷன் பெய்க் சபாநாயகரை சந்தித்து, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று கடிதம் கொடுத்தார்.

இந்த நிலையில், கர்நாடக சட்டமன்ற கட்டிடத்தின் முன் இன்று கூடி முன்னாள் முதல் மந்திரி மற்றும் பா.ஜ.க. தலைவரான எடியூரப்பா மற்றும் அக்கட்சியை சேர்ந்த பிற தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, கர்நாடக சட்டமன்ற சபாநாயகரை இன்று மாலை 3 மணியளவில் சந்தித்து பேச உள்ளோம்.  கர்நாடக மந்திரி சிவக்குமார், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை கிழித்துள்ளதற்கு சபாநாயகர் இன்னும் கண்டனம் தெரிவிக்கவில்லை.  கடிதங்களை கிழிப்பது என்பது மன்னிக்க முடியாதது என கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, வருகிற 12ந்தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.  ஆனால் அதற்கான உறுப்பினர்கள் அவர்களிடம் இல்லை.  இது சட்டவிரோத முறையிலான கூட்டத்தொடராக இருக்கும்.  இன்னும் காலதாமதம் எதுவும் ஏற்படவில்லை.  நீங்கள் (கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி) பதவி விலகி பா.ஜ.க. அரசு அமைக்க வழிவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Next Story