கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட கோரி 10 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
கர்நாடகத்தைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள், தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குழப்பமான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
அந்த மாநிலத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தனர். மேலும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.
இதனால் அரசு மெஜாரிட்டி பலத்தை இழந்துவிட்டதால் குமாரசாமி அரசு பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா வற்புறுத்தி வருகிறது. அதேசமயம், ஆட்சியை கவிழ்ப்பதற்காகவே தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி அவர்களை பாரதீய ஜனதா ராஜினாமா செய்ய வைத்திருப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
மேலும் 2 பேர் விலகல்
ஆனால் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக வீட்டு வசதி துறை மந்திரியாக இருந்த எம்.டி.பி.நாகராஜ், கே.சுதாகர் ஆகியோர் நேற்று தங்கள் எம்.எல்.ஏ. பதவியை விட்டு விலகினார்கள். அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கொடுத்தனர்.
இதனால் பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் மும்பை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பாந்திரா பகுதியில் உள்ள சோபிடெல் என்ற நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 7 பேர் காங்கிரசையும், 3 பேர் ஜனதாதளம்(எஸ்) கட்சியையும் சேர்ந்தவர்கள். 2 பேர் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள்.
இதற்கிடையே பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களில் பிரதாப் கவுடா பாட்டீல், ரமேஷ் ஜார்கிகோளி, பைரதி பசவராஜ், பி.சி.பாடீல், எஸ்.டி.சோமசேகர், அர்பைல் சிவராம் ஹெப்பார், மகேஷ் குமதல்லி, கே.கோபாலையா, எச்.டி.விஸ்வநாத், நாராயண் கவுடா ஆகிய 10 பேர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாகவும் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக தங்களை பதவி நீக்கம் செய்ய முயற்சிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் தங்கள் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடுமாறும், அவர் தங்களை பதவி நீக்கம் செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுவில் 10 எம்.எல்.ஏ.க்களும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
விசாரணை
இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மேற்கண்ட 10 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, வக்கீல் சுப்ரான்சு பதி ஆகியோர் ஆஜராகி, மனுதாரர்களின் ராஜினாமாவை சபாநாயகர் உள்நோக்கத்துடன் ஏற்க மறுப்பதாகவும், இவர்கள் அனைவரும் புதிதாக தேர்தலில் போட்டியிடும் வகையில் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து இருப்பதாகவும், எனவே ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடும் வகையில் இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று இன்றே (நேற்று) விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டனர்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கை நாளை (அதாவது இன்று) விசாரணைக்கு பட்டியலிடுமாறு உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி இன்று (வியாழக்கிழமை) இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
மந்திரியை தடுத்து நிறுத்திய போலீசார்
இதற்கிடையே, மும்பை பாந்திராவில் உள்ள சோபிடெல் ஓட்டலில் தங்கி இருந்த கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து கோவா செல்ல உள்ளதாக கூறப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மும்பை பவாயில் உள்ள ‘ரெனைசன்ஸ்’ நட்சத்திர ஓட்டலுக்கு அவர்கள் இடம் மாறினார்கள். அவர்களை சந்திக்க கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், அந்த மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரியுமான டி.கே.சிவக்குமார் நேற்று அங்கு வர இருப்பதாக தகவல் வெளியானதால், அந்த ஓட்டலை சுற்றிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ஓட்டலில் தங்கி இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எனவே மந்திரி டி.கே.சிவக்குமாரை ஓட்டலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் மும்பை போலீஸ் கமிஷனருக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தனர்.
இந்த நிலையில் கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று காலை 8.20 மணிக்கு அங்கு வந்தார். ஆனால் அவரை ஓட்டலுக்குள் செல்ல விடாமல் நுழைவு வாயிலிலேயே மும்பை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
அறை முன்பதிவு ரத்து
இதனால் ஆத்திரம் அடைந்த டி.கே.சிவக்குமார் தான் அந்த ஓட்டலில் உள்ள ஒரு அறையை முன்பதிவு செய்துள்ளதாகவும், எனவே தன்னை தடுத்து நிறுத்த முடியாது என்றும் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், டி.கே. சிவக்குமார் அறை முன்பதிவு செய்ததை அந்த ஓட்டல் நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்தது. அவசர நிலை காரணமாக அவரது முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஓட்டலில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களை சந்திக்காமல் இங்கிருந்து நகர மாட்டேன் என்று டி.கே.சிவக்குமார் பிடிவாதம் செய்தார். நீண்ட நேரம் கால்கடுக்க அங்கு நின்ற அவர், பின்னர் ஓட்டல் சுற்றுச்சுவரில் அமர்ந்தார்.
பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தனர்
இந்த பரபரப்பான சூழலில், அங்கு திரண்டு இருந்த பாரதீய ஜனதாவினர், டி.கே.சிவக்குமாரை கர்நாடகத்துக்கு திரும்பிச் செல்லக் கோரி கோஷமிட்டனர். அந்த சமயத்தில், டி.கே.சிவக்குமாருக்கு ஆதரவாக மும்பையை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி மிலிந்த் தியோரா, முன்னாள் மராட்டிய மந்திரி ஆரிப் நசீம்கான் ஆகியோர் அங்கு வந்தனர். காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அங்கு திரண்டனர். அவர்கள் பாரதீய ஜனதாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் உச்சக்கட்ட குழப்பம் நிலவியது.
இந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் கர்நாடக மந்திரி டி.கே. சிவக்குமார், மிலிந்த் தியோரா, ஆரிப் நசீம்கான் உள்ளிட்ட காங்கிரசாரை போலீஸ் வேனில் ஏற்றி பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள போலீஸ் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்.
அதன்பிறகு மாலையில் டி.கே.சிவக்குமாரை விமானநிலையத்துக்கு அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றி பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தனர்.
எடியூரப்பா தர்ணா
இந்த சூழ்நிலையில், முதல்-மந்திரி குமாரசாமி பதவி விலக கோரி பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு பாரதீய ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் அக்கட்சியினர் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தின்போது எடியூரப்பா பேசுகையில், சட்டசபையில் பெரும்பான்மை பலம் இல்லாதபோது, கூட்டத்தொடரை குமாரசாமி எப்படி நடத்த முடியும்? என்றும், எனவே அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
பின்னர் எடியூரப்பா தலைமையில் பாரதீய ஜனதா கட்சியினர் கவர்னர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து, காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால், குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது என்றும், எனவே இந்த பிரச்சினையில் தாங்கள் தலையிட வேண்டும் என்றும் கோரி கடிதம் ஒன்றை கொடுத்தனர். மேலும் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடுமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. மனு
இதற்கிடையே கர்நாடக மாநில அ.தி.மு.க. இணைச் செயலாளர் எஸ்.டி.குமார் தலைமையில் கவர்னர் அலுவலகத்திற்கு சென்ற அக்கட்சியினர், கர்நாடகத்தில் கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்து விட்டதால், புதிய அரசு அமைக்க பாரதீய ஜனதாவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.
கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து அதிரடியான திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், அந்த மாநிலம் சட்டசபை கூட்டத்தொடர் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story