ஊழல் குற்றச்சாட்டு, திறமையின்மை காரணமாக அரசு அதிகாரிகள் 312 பேருக்கு கட்டாய பணி ஓய்வு மத்திய அரசு தகவல்


ஊழல் குற்றச்சாட்டு, திறமையின்மை காரணமாக அரசு அதிகாரிகள் 312 பேருக்கு கட்டாய பணி ஓய்வு மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 11 July 2019 1:30 AM IST (Updated: 11 July 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

ஊழல் குற்றச்சாட்டு மற்றும் பணியில் திறமையின்மை போன்ற காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளில் அரசு அதிகாரிகள் 312 பேருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி, 

ஊழல் குற்றச்சாட்டு மற்றும் பணியில் திறமையின்மை போன்ற காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளில் அரசு அதிகாரிகள் 312 பேருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

கட்டாய பணி ஓய்வு

மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது:–

அரசு ஊழியர் பணி விதிகளின்படி கடந்த 2014 ஜூலை முதல் 2019 மே மாதம் வரையிலான காலகட்டத்தில் குரூப்–ஏ பிரிவு அதிகாரிகள் 36,756 பேர் மற்றும் குரூப்–பி பிரிவு அதிகாரிகள் 82,654 பேரின் பணி ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் குரூப்–ஏ பிரிவு அதிகாரிகள் 125 பேர் மற்றும் பி பிரிவு அதிகாரிகள் 187 பேர் என மொத்தம் 312 பேர் மீது ஊழல் மற்றும் திறமையின்மை குற்றச்சாட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

அரசுக்கு அதிகாரம் உண்டு

அனுமதிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விதிகளின்படி ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் கட்டாய பணி ஓய்வு அளிக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டு.

இதைப்போல ஒருங்கிணைப்பு மற்றும் பணித்திறன் குறைபாடு கொண்ட அதிகாரிகளுக்கும் பொதுநலன் கருதி முன்கூட்டியே பணி ஓய்வு அளிக்கும் அதிகாரமும் அரசுக்கு உண்டு.

இவ்வாறு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறினார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பற்றாக்குறை

இதைப்போல மற்றொரு கேள்விக்கு மந்திரி ஜிதேந்திர சிங் பதிலளிக்கையில், ‘நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை 6,699 ஆக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி நிலவரப்படி 5,205 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே உள்ளனர். அந்தவகையில் சுமார் 1500 அதிகாரிகள் பற்றாக்குறையாக இருக்கின்றனர்’ என்று கூறினார்.

இந்த பற்றாக்குறையை சமாளிப்பதற்காக ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதாக கூறிய ஜிதேந்திர சிங், மாநிலங்களில் பதவி மூப்பு மூலம் நிரப்பப்பட வேண்டிய ஐ.ஏ.எஸ். பணியிடங்களும் உடனுக்குடன் நிரப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.


Next Story