நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ள ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது
நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ள ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ. 1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ள ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ. 1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.
ஜன்தன் வங்கி கணக்கு
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு முதன்முதலாக பதவி ஏற்று, அதே ஆண்டின் ஆகஸ்டு 15-ந் தேதி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரை ஆற்றியபோது, நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் வங்கி கணக்கு தொடங்க வசதியாக பிரதம மந்திரி ஜன்தன் வங்கி கணக்கு திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார்.
அதே ஆண்டு, ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
வசதிகள்
இந்த வங்கி கணக்கு விபத்து காப்பீடு வசதி கொண்டது. ரூபே டெபிட் கார்டு வசதியும் உண்டு. வங்கி கணக்கில் இருப்பதை விட ரூ.10 ஆயிரம் வரை கூடுதலாக ரொக்கமாக (ஓவர் டிராப்ட்) எடுக்க முடியும். மத்திய, மாநில அரசுகளின் மானியங்களை இந்த வங்கி கணக்கு வழியாக பயனாளிகள் பெற்றுக்கொள்ள முடியும்.
அதே நேரத்தில் குறைந்தபட்ச இருப்புத்தொகை, வங்கி கணக்கில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் தொகை ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ரூ. 1 லட்சம் கோடி டெபாசிட்
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்படி, கடந்த 3-ந் தேதி நிலவரப்படி ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. இந்த கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள மொத்த தொகை ரூ.1 லட்சத்து 495 கோடியே 94 லட்சம் ஆகும். இந்த வங்கி கணக்குகளை தொடங்கியவர்களில் 28 கோடியே 44 லட்சம் பேர் ரூபே டெபிட் கார்டு வசதியை பெற்றுள்ளனர்.
ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருப்போரில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த வங்கி கணக்கு தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியான தகவல் வருமாறு:-
ஜன்தன் வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாத கணக்குகளின் எண்ணிக்கை 2018 மார்ச் மாதம் 5 கோடியே 10 லட்சமாக இருந்தது. இது இந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி 5 கோடியே 7 லட்சமாக குறைந்துள்ளது.
விபத்து காப்பீடு உயர்வு
2018-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந் தேதிக்கு பிறகு தொடங்கப்பட்ட ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருப்போரின் விபத்து காப்பீடு வரம்பு ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story