சென்னையில் 2–ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிக்கான அனுமதி வழங்குவது எப்போது? அ.தி.மு.க. எம்.பி. கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்
2018–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மெட்ரோவின் 107.55 கி.மீ. நீளத்துக்கான 2–வது கட்ட பணிகளை ரூ.85 ஆயிரத்து 47 கோடி செலவில் அமல்படுத்தும் முடிவை, தமிழக அரசு மாநில திட்டமாக தெரிவித்தது.
புதுடெல்லி,
மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் வா.மைத்ரேயன் நேற்று பேசும்போது, ‘சென்னை மெட்ரோ திட்டத்தின் முதல்கட்ட பணிகளில் 50:50 என்ற வகையில், மத்திய அரசும், தமிழக அரசும் கூட்டாளித்துவ ஒப்பந்தத்தை எட்டியது போன்று, 2–வது கட்ட திட்ட பணிகளிலும் 50:50 என்ற வகையில் எப்போது அனுமதி வழங்கப்படும்?’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி ஹர்திப் சிங் புரி பேசியதாவது:–
2018–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மெட்ரோவின் 107.55 கி.மீ. நீளத்துக்கான 2–வது கட்ட பணிகளை ரூ.85 ஆயிரத்து 47 கோடி செலவில் அமல்படுத்தும் முடிவை, தமிழக அரசு மாநில திட்டமாக தெரிவித்தது. இந்த திட்டத்தின் பகுதி நிதியை பெறுவதற்காக ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு ஏஜென்சி(ஜே.ஐ.சி.ஏ.) மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்பிறகு 2019–ம் ஆண்டு ஜனவரி 8–ந் தேதி, சென்னை மெட்ரோவின் 118.9 கி.மீ. நீள 2–ம் கட்ட பணிகளை ரூ.69 ஆயிரத்து 180 கோடியில் (50:50 என்ற விகித அடிப்படையில்) செயல்படுத்த திருத்தப்பட்ட திட்டத்தை தமிழக அரசு சமர்ப்பித்தது. இந்த திட்டம் குறித்து ஆராய்ந்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் தனது கருத்துகளை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி உள்ளது. மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான அனுமதி தொடர்பாக அனைத்து பங்குதாரர்களுடன் ஆலோசிக்க வேண்டியது மிக அவசியம். எனவே அனுமதி வழங்க எந்தக் காலக்கெடுவும் நிர்ணயிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.