எதிர்க்கட்சி பணி மகிழ்ச்சி மற்றும் எளிமையானது: ராகுல் காந்தி பேச்சு; கட்சியினர் உற்சாகம்


எதிர்க்கட்சி பணி மகிழ்ச்சி மற்றும் எளிமையானது:  ராகுல் காந்தி பேச்சு; கட்சியினர் உற்சாகம்
x
தினத்தந்தி 11 July 2019 8:02 AM IST (Updated: 11 July 2019 8:02 AM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சி பணி மகிழ்ச்சி நிறைந்தது மற்றும் எளிமையானது என ராகுல் காந்தி பேசியது கட்சியினரிடையே உற்சாகம் ஏற்படுத்தி உள்ளது.

அமேதி,

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிட்டார்.  கட்சியினரின் தொடர் வற்புறுத்தலால் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிட்டார்.

அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி நிறுத்தப்பட்டார்.  இதில் அதிர்ச்சி தரும் வகையில் அதிக வாக்குகளை பெற்று இரானி வெற்றி பெற்று தொகுதியை கைப்பற்றினார்.  எனினும், வயநாடு தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல் அங்கு வெற்றி பெற்றார்.

14வது, 15வது மற்றும் 16வது மக்களவை தேர்தல்களில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்ற நிலையில், சமீபத்தில் நடந்த 17வது மக்களவைக்கான தேர்தலில் அவர் தோல்வியை தழுவியது கட்சியினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது.  தொடர்ந்து தேர்தலிலும் குறைந்த தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றி தோல்வி அடைந்தது.  பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.  இதனை அடுத்து கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என அவர் அறிவிப்பு வெளியிட்டார்.

ஆனால் அவர் பதவியில் நீடிக்கும்படி அக்கட்சியின் முதல் மந்திரிகளும், பல்வேறு மூத்த தலைவர்களும் வற்புறுத்தினர்.  எனினும் தனது பதவி விலகல் முடிவில் அவர் உறுதியாக உள்ளார்.

இதனிடையே, அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராகுல் காந்தி அங்கு கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றார்.  அவருக்கு கட்சியின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.  இதன்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.

அவர் கூறும்பொழுது, மோடி நாட்டின் பிரதமராக இருக்கிறார்.  உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார்.  இந்த தொகுதியின் எம்.பி.யாக பா.ஜ.க.வை சேர்ந்தவர் (ஸ்மிரிதி இரானி) உள்ளார்.

நாம் எதிர்க்கட்சி பணியை இப்பொழுது மேற்கொள்ள வேண்டும்.  இது மிகவும் மகிழ்ச்சி நிறைந்தது.  அதனுடன் எளிமையானது என கூறினார்.  அவர் ஊக்கமூட்டும் வகையில் பேசியுள்ளது கூடியிருந்த கட்சியினரிடையே உற்சாகம் ஏற்படுத்தி உள்ளது.

Next Story