எம்.எல்.ஏக்கள் ராஜினாமா, அரசியல் சூழ்ச்சியா? கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் பேட்டி
எம்.எல்.ஏக்கள் ராஜினாமா, அரசியல் சூழ்ச்சியா? அல்லது தானாக எடுத்த முடிவா? என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்ய மாட்டேன் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் உள்ள விதான் சவுதாவில் கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார் முன் ஆஜரான 10 எம்எல்ஏக்களில் 8 பேர் மீண்டும் புதிதாக ராஜினாமா கடிதம் அளித்தனர்.
அதிருப்தி எம்எல்ஏக்களுடனான சந்திப்புக்கு பின் கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சபாநாயகராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. யாரையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. ராஜினாமா கடிதம் கொடுத்த 11 பேரில், 8 பேரின் ராஜினாமா கடிதம் முறையாக அளிக்கப்படவில்லை.
அந்த 8 பேரிடமும் முறையாக நேரில் ராஜினாமா கடிதத்தை அளிக்குமாறு கேட்டேன். இந்த ராஜினாமா, அரசியல் சூழ்ச்சியா? அல்லது தானாக எடுத்த முடிவா? என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்ய மாட்டேன் ஜனநாயக முறைப்படி செயல்படுவேன்.
ராஜினாமா குறித்து விளக்கம் அளிக்குமாறு எம்எல்ஏக்களுக்கு முறையாக சந்தர்ப்பம் வழங்கினேன். ஆனால் அதையெல்லாம் ஏற்காமல் அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்கள்.
கர்நாடக எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்கமாட்டேன். எம்.எல்.ஏக்கள் ஒரு சபாநாயகரை சந்திக்க உச்சநீதிமன்றம் சென்றுதான் அனுமதி பெற வேண்டுமா? மக்களுக்கு மட்டுமே பதிலளிக்க நான் கடமைப்பட்டவன்.
என்னை அணுகி இருந்தால் முறையான பாதுகாப்பு வழங்கி இருப்பேன் என அவர்களிடம் தெரிவித்தேன். சிலரின் மிரட்டல் காரணமாக மும்பை சென்றதாக 10 எம்.எல்.ஏக்களும் கூறினர். எம்.எல்.ஏக்களின் ராஜினாமா குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story