ரூ.25 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்ற கொள்ளையர்கள் மராட்டியத்தில் துணிகர சம்பவம்


ரூ.25 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்ற கொள்ளையர்கள் மராட்டியத்தில் துணிகர சம்பவம்
x
தினத்தந்தி 13 July 2019 10:00 PM GMT (Updated: 13 July 2019 8:58 PM GMT)

மராட்டியத்தில் ரூ.25 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரம் தூக்கி செல்லப்பட்ட துணிகர சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அவுரங்காபாத்,

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில், பீட் பைபாஸ் சாலையில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்தில் 2 ஏ.டி.எம். எந்திரங்கள் இருந்தன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் மர்ம ஆசாமிகள் சிலர் ஜீப்பில் அங்கு வந்தனர். அவர்கள் மையத்துக்குள் நுழைந்து ஒரு ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுத்தனர். பின்னர் அந்த எந்திரத்தை ஜீப்பில் ஏற்றினர்.

கொள்ளையின் போது அந்த ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடிகள் உடைந்துள்ளது. இந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் விரைந்து வந்து பார்த்தனர். அதற்குள் கொள்ளை ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடிகள் உடைந்து கிடந்ததையும், அங்கு இருந்த ஒரு எந்திரம் மாயமானதையும் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். கொள்ளையர்கள் தூக்கி சென்ற ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.25 லட்சம் இருந்தது தெரியவந்தது.

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சமீபத்தில் தான் புனேயில் இதேபோல் பொதுத்துறை வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரம் ஒன்று கொள்ளை கும்பலால் ரூ.30 லட்சத்துடன் தூக்கி செல்லப்பட்டது. அதே பாணியில் மீண்டும் ஏ.டி.எம். எந்திரம் கொள்ளை நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story