வடகிழக்கு மாநிலங்களில் கனமழை நீடிப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


வடகிழக்கு மாநிலங்களில் கனமழை நீடிப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 15 July 2019 6:46 AM IST (Updated: 15 July 2019 7:23 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

கவுகாத்தி,

இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை, வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது தீவிரம் அடைந்து உள்ளது. உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்களிலும் மற்றும் அசாம், நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் டீஸ்டா, சங்கோஷ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டதால் கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இமயமலையையொட்டி அமைந்துள்ள டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி, அலிப்பூர்தார் மாவட்டங்களில் இன்றும் (திங்கட்கிழமை) மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. ஜல்பைகுரி மாவட்டத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த ஒருவர் பலி ஆனார். சில இடங்களில் சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அசாம் மாநிலத்திலும் பிரம்மபுத்ரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. 28 மாவட்டங்களில் 26½ லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அசாமில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

திரிபுராவில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. தலைநகர் அகர்தலாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அகர்தலாவின் புறநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு உள்ளனர். ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். மீட்புப் பணிக்கு ரப்பர் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தநிலையில் இன்றும் திரிபுராவில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.


Next Story