பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேர் கைது
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்து உள்ளனர்.
புதுடெல்லி,
ஈஸ்டர் தினத்தன்று, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பானது இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலை நிகழ்த்தியது. இதில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகளுடன் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு உளவுத்துறை கூறி இருந்தது.
இதன்படி, கேரளாவிலும், தமிழகத்திலும் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பலரைக் கைது செய்தனர். பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொச்சியில் உள்ள அலுவலகத்தில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவானது, மண்ணடி லிங்கி செட்டி தெருவில் உள்ள இஸ்லாமிக் ஹிண்ட் என்ற அமைப்பின் அலுவலகத்தில் சோதனை நடத்தியது. இது போல் புரசைவாக்கத்தில் இஸ்லாமிய அமைப்பின் மாநில தலைவர் முகமது புகாரி வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
அந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே சோதனை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் நாகப்பட்டினத்தில் மஞ்சகொல்லை, சிக்கல் ஆகிய இடங்களில் அசன் அலி, ஹாரீஸ் முகமது ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் அடிப்படையில் கிடைத்த தகவல் படி தேசிய புலனாய்வு அமைப்பினர் டெல்லியில் 14 பேரை கைது செய்தனர். அன்சருல்லா பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக கூறப்படுகிறது. இவர்கள் 14 பேரும் இன்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகின்றனர். பிற்பகலில் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.
Related Tags :
Next Story