அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறி உள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் முதல்வர் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று சபாநாயகர் கே.ஆர். ரமேஷிடம் பாஜக தலைவர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக அரசியலில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆளும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இதனால் முதல்வர் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
அத்துடன் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இருப்பினும் தம்மால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என அதிரடியாக அறிவித்தார் முதல்வர் குமாரசாமி.
இதையடுத்து பாஜக தமது எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை கூடுகிறது.
முன்னதாக சபாநாயகர் கே.ஆர். ரமேஷை சந்தித்த ஜேடிஎஸ்-காங்கிரஸ் தலைவர்கள் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்காமல் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தினர். அதேபோல் சபாநாயகரை சந்தித்த பாஜக தலைவர் எடியூரப்பா, முதல்வர் குமாரசாமி அரசு பெரும்பான்மையை உடனே நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
தற்போது கர்நாடக சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக வலியுறுத்தியது
இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் வரும் 18-ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. காலை 11 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
கர்நாடக சட்டசபையில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவாதம் நடைபெறும் என சித்தராமைய்யா தெரிவித்து உள்ளார்.
அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் சபாநாயகர் அவையை ஒத்திவைத்தார். இன்று விவாதம் எதுவுமின்றி சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
Related Tags :
Next Story