தேசிய செய்திகள்

பஞ்சாப் முதல் மந்திரிக்கு தனது பதவி விலகல் கடிதத்தினை அனுப்பினார் சித்து + "||" + Sidhu sends resignation letter to Amarinder

பஞ்சாப் முதல் மந்திரிக்கு தனது பதவி விலகல் கடிதத்தினை அனுப்பினார் சித்து

பஞ்சாப் முதல் மந்திரிக்கு தனது பதவி விலகல் கடிதத்தினை அனுப்பினார் சித்து
பஞ்சாப் முதல் மந்திரிக்கு தனது மந்திரி பதவி விலகல் கடிதத்தினை சித்து அனுப்பியுள்ளார்.
சண்டிகார்,

பஞ்சாப் மாநில சுற்றுலா மற்றும் கலாசார விவகார துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர் நவ்ஜோத் சிங் சித்து.

முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  இதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.  அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியில் இருந்தும் எதிர்ப்பு குரல் வலுத்தது.  ஆனால், சித்து தனது தரப்பு நியாயத்தினை விளக்கினார்.  முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் எனக்கு முறைப்படி அழைப்பு விடப்பட்டது.  அதனை மதித்தே பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன்.

அந்த நிகழ்ச்சியில், சீக்கியர்களுக்கு நன்மை செய்யும் வகையிலான கர்டார்பூர் வழித்தடத்தினை திறப்பது பற்றி தன்னிடம் அந்நாட்டு உயரதிகாரி ஒருவர் நம்பிக்கையுடன் பேசினார் என்றும் சித்து கூறினார்.  எனினும், முன்னாள் ராணுவ அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்ட மாநில முதல் மந்திரி அமரீந்தர் சிங்கும் சித்துவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பேசினார்.  இதிலிருந்தே இருவருக்கும் இடையே அதிருப்தி ஏற்பட்டது.

கடந்த மாதத்தில், உள்ளூர் அரசு துறையை சரியாக கையாள சித்துவுக்கு தெரியவில்லை.  அதனால் மக்களவை தேர்தலில் நகர்ப்புறங்களில் காங்கிரஸ் கட்சி மோசம் நிறைந்த தோல்வியை சந்தித்தது என சிங் குற்றச்சாட்டாக கூறினார்.  இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டது.

இதன்பின் கடந்த ஜூன் 6ந்தேதி மந்திரிசபையில் மாற்றம் ஏற்பட்டது.  இதில் முக்கிய இலாகாக்கள் சித்துவிடம் இருந்து பறிக்கப்பட்டன.  அவர் வகித்து வந்த உள்ளூர் அரசு மற்றும் சுற்றுலா மற்றும் கலாசார விவகார துறைகளுக்கான மந்திரி பதவிக்கு பதிலாக, மின் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலாகா ஒதுக்கப்பட்டது.

இதேபோன்று வேறு பல மந்திரிகளின் இலாகாக்களும் மாற்றியமைக்கப்பட்டன.  மந்திரி சபை மாற்றியமைக்கும் வரை சித்து மற்றும் அவரது மனைவி நவ்ஜோத் கவுர் ஊடகங்களிடம் எதுவும் பேசாமல் தவிர்த்து வந்தனர்.

இதற்கிடையே, கடந்த ஜூன் 9ந்தேதி டெல்லியில் ராகுல் காந்தியை சித்து சந்தித்து பேசினார்.  இதன்பின், அப்பொழுது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்திக்கு ஜூன் 10ந்தேதி கடிதம் ஒன்றை அனுப்பினார்.  அதில் தனது பதவி விலகல் பற்றி தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநில அமைச்சர் பதவி விலகல் கடித நகலை சித்து நேற்று டுவிட்டரில் வெளியிட்டார்.  அதில், கடந்த ஜூன் 10 என தேதியிடப்பட்ட எனது கடிதம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திஜிக்கு அனுப்பப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அவர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எனது பதவி விலகல் கடிதம் முதல் மந்திரிக்கு அனுப்பப்பட்டு விட்டது.  அவரது அலுவலக இல்லத்தில் அது சேர்ந்து விட்டது என தெரிவித்து உள்ளார்.