தமிழில் கேள்விகள் இடம்பெறாத தபால்துறை தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும் மாநிலங்களவையில் அ.தி.மு.க., தி.மு.க. வலியுறுத்தல்
தபால்துறை தேர்வை ரத்து செய்து விட்டு, தமிழ் கேள்விகளுடன் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
புதுடெல்லி,
மத்திய அரசின் தபால்துறையில் தபால் ஊழியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. வழக்கமாக, இந்த தேர்வில், கேள்விகள் ஆங்கிலம், இந்தி மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் இடம்பெற்று இருக்கும்.
ஆனால், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே கேள்விகள் இடம்பெற வேண்டும் என்று தபால்துறைக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இதனால், தமிழில் கேள்விகள் இடம்பெறாமல், தபால்துறை தேர்வு நடந்து முடிந்தது.
இந்த சுற்றறிக்கைக்கு தமிழ்நாட்டில் ஏற்கனவே கடும் எதிர்ப்பு எழுந்தது.
நவநீத கிருஷ்ணன்
இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று இப்பிரச்சினை எழுப்பப்பட்டது. பூஜ்ய நேரத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் ஏ.நவநீத கிருஷ்ணன் இதுகுறித்து பேசியதாவது:-
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தபால்துறை தேர்வில் கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருந்தது. தமிழில் இல்லை. ஆகவே, அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழ் கேள்விகளுடன் புதிதாக தேர்வு நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருச்சி சிவா
தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா பேசியதாவது:-
தபால்துறை தேர்வுகள், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கை, தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பான மனநிலையை உருவாக்கி உள்ளது. முன்பு, இந்த தேர்வு மாநில மொழிகளிலும் நடத்தப்பட்டது.
ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணிகளில் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு, தமிழக இளைஞர்களிடையே நிலவி வருகிறது. இந்தநிலையில், மாநில மொழிகளில் தேர்வு நடத்தாதது தேவையற்ற ஒன்று. ஆகவே, அந்த சுற்றறிக்கையை ரத்து செய்து விட்டு, மாநில மொழிகளிலும் தேர்வு நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மந்திரியிடம் பேசுங்கள்
அப்போது, சபைத்தலைவர் வெங்கையா நாயுடு குறுக்கிட்டு, “இந்த விவகாரம் மிகவும் முக்கியமானது. நான் சம்பந்தப்பட்ட மந்திரியிடம் பேசிவிட்டேன். நீங்களும் அவரிடம் பேசுங்கள்“ என்று கூறினார்.
மேலும், இப்பிரச்சினையை கவனிக்குமாறு அவை முன்னவர் தாவர்சந்த் கெலாட்டை கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story