சந்திரயான் 2 விண்கலம் ஏவப்படுவது கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதற்கான தொழில்நுட்பக் கோளாறு என்ன? புதிய தகவல்கள்


சந்திரயான் 2 விண்கலம் ஏவப்படுவது கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதற்கான தொழில்நுட்பக் கோளாறு என்ன? புதிய தகவல்கள்
x
தினத்தந்தி 16 July 2019 12:22 PM GMT (Updated: 16 July 2019 12:22 PM GMT)

சந்திரயான் 2 விண்கலம் ஏவப்படுவது கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதற்கான தொழில்நுட்பக் கோளாறு என்ன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு,

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், நேற்று அதிகாலை 2.51 மணிக்கு ஏவப்பட இருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 56 நிமிடங்களுக்கு முன்னதாக அதிகாலை 1.55 மணிக்கு, சந்திரயான் 2 விண்கலம், விண்ணில் ஏவப்படுவது நிறுத்தப்பட்டு, வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்ட இஸ்ரோ தொழில்நுட்பக் குழுக்கள், ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் கிரையோஜெனிக் என்ஜினில், ஹீலியம் வாயுக்குழலின் முனை இணைப்பில் ஏற்பட்ட கசிவுதான் தொழில்நுட்பக் கோளாறுக்கு காரணம் என கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எரிபொருளுக்கும் எரிபொருள் எரிவதற்கு உதவும் ஆக்சிடைசருக்கும் அழுத்தத்தை வழங்க ஹீலியம் வாயுக்குழல் உதவுகிறது. இதன் முனை இணைப்பில்தான் கசிவு ஏற்பட்டுள்ளது. 34 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த வாயுக் குழல், 350 பார்கள் என்ற அளவில் அழுத்த மூட்டப்பட்டு, பின்னர் 50 பார்கள் என்ற அளவில் அழுத்தம் சீராக்கப்படும்.

கசிவு ஏற்பட்டதால், நிமிடத்திற்கு 4 பார்கள் என்ற அளவில் அழுத்தக் குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலும் ராக்கெட் விண்ணில் பாய்ந்திருக்கும் என்றாலும், தவறு நேர்வதற்காக வாய்ப்பளித்துவிடக் கூடாது என்பதற்காக ஏவுதல் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைனஸ் 183 டிகிரி என்ற நிலையில் உள்ள திரவ ஆக்சிஜன் டேங்கிற்கு செல்லும் முனை இணைப்பு என்பதால், இந்த மீக்குளிர் நிலை காரணமாக சிறிது சுருங்கியிருக்க வாய்ப்புள்ளது என்றும், அதற்கான காப்பு ஏற்பாட்டை செய்வது அல்லது மீக்குளிர் புள்ளியிலிருந்து இணைப்பை தள்ளி அமைப்பது இதற்கு தீர்வாக அமையலாம் என மூத்த  விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கசிவு பெரிதாக ஏற்பட்டால், எரிபொருள் எரிவதும், திசைவேகமும் பாதிக்கப்பட்டு ராக்கெட்டை கட்டுப்பாட்டை மீறி சுழலச் செய்து விடும் அபாயம் உண்டு எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆக்சிஜன் டேங்க்கின் மேல் அமைந்துள்ள ஹீலியம் வாயு குழலை அணுகுவதற்கு வழி இருப்பதால், ராக்கெட்டை பிரிக்காமலேயே இந்த கசிவை சரிசெய்துவிட முடியும் என இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார். இருப்பினும், கசிவு ஏன் ஏற்பட்டது என்பதைக் கண்டறியாவிட்டால் மீண்டும் அதே சிக்கல் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கசிவு ராக்கெட் பறத்தலுக்கு இடையூறாக மாறிவிடாது என்ற போதிலும், 978 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டம் என்பதாலும், நிலவில் ஆய்வூர்தியை  தரையிறக்க ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த சாதனை முயற்சி என்பதாலும் இஸ்ரோ மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளது.

ராக்கெட்டை பிரிக்க வேண்டிய தேவை இல்லை என்பதால், ஜூலை இறுதிக்குள் சந்திரயான் 2 விண்கலத்தை ஏவ வாய்ப்பிருக்கலாம் எனவும், இருப்பினும் இறுதி முடிவு ஓரிரு நாளில் வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story