நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடையும்: எடியூரப்பா
நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடையும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான ஜனதாதளம்(எஸ்), காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி அரசுக்கு எதிராக 15 எம்.எல்.ஏ.க்கள் திரும்பி உள்ளனர். அந்த வகையில், காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
அவர்கள் ராஜினாமா மீது சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார் முடிவு எடுக்காததால், சுப்ரீம் கோர்ட்டை நாடினர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது. நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வது அதிருப்தி எம்.எல்.ஏக்களின் விருப்பம். அவர்களை கலந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்று தீர்ப்பளித்தது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த நிலையில், ”நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு நிச்சயம் கவிழும். ஏனெனில் அவர்களுக்கு பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை இல்லை” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்த எடியூரப்பா, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு கிடைத்த தார்மீக வெற்றி. இது தற்காலிக தீர்ப்பு மட்டுமே, சபாநாயகரின் அதிகாரம் பற்றி உச்ச நீதிமன்றம் எதிர்காலத்தில் முடிவு செய்யும்” என்றார்.
Related Tags :
Next Story