தேசிய செய்திகள்

பீகாரில் வெள்ள பாதிப்பின் இடையே பிறந்த 8 குழந்தைகள் + "||" + NDRF men facilitate safe delivery of 8 kids in flood-hit areas of Bihar

பீகாரில் வெள்ள பாதிப்பின் இடையே பிறந்த 8 குழந்தைகள்

பீகாரில் வெள்ள பாதிப்பின் இடையே பிறந்த 8 குழந்தைகள்
பீகாரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் இடையே 8 குழந்தைகள் பிறந்துள்ளன.
பீகாரில் பருவமழை தொடங்கியபின் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.

பீகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலியாகி உள்ளனர்.  25.71 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர்.  நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் அதிவிரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக 125 இயந்திர படகுகளும், தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படைகளின் 26 கம்பெனி படைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.  அவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 1.25 லட்சம் பேரை மீட்டுள்ளனர்.

இதுவரை 199 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு 1.16 லட்சம் பேர் வரை தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  மொத்தம் 676 சமூக சமையலறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.  வியாதிகளை தடுக்க மருந்து மற்றும் குடிநீர் ஆகியவற்றுக்கான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.

இதனிடையே, மதுபானி நகரில் ஜஞ்ஜார்பூர் பகுதியருகே சீமா தேவி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.  ஜஞ்ஜார்பூர் வட்ட அதிகாரி அவருக்கு உதவி செய்யும்படி தேசிய பேரிடர் பொறுப்பு படையிடம் கேட்டு கொண்டார்.

உடனடியாக அங்கு வந்த படையினர் படகு ஒன்றில் அவரை சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.  பின்னர் மருத்துவர்கள் அறிவுரையின்படி மற்றொரு படகில் அவரை வீட்டில் கொண்டு சென்று விட்டனர்.

இதுவரை குழந்தை பெறும் நிலையில் இருந்த 8 கர்ப்பிணி பெண்களை மீட்டுள்ளோம் என படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.  அவர்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளன.  அவர்களில் 3 பேர் மதுபானி நகரையும், முசாபர்பூர் மற்றும் அராரியா நகரங்களை சேர்ந்த தலா இருவரும் மற்றும் மோதிஹரி நகரை சேர்ந்த ஒருவரும் ஆவர்.  இதனால் பீகாரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் இடையே 8 குழந்தைகள் பிறந்துள்ளன.