தமிழகத்தில் இந்தி திணிப்பு: மக்களவையில் தி.மு.க., பா.ஜனதா மோதல்


தமிழகத்தில் இந்தி திணிப்பு: மக்களவையில் தி.மு.க., பா.ஜனதா மோதல்
x
தினத்தந்தி 17 July 2019 9:17 PM GMT (Updated: 17 July 2019 9:17 PM GMT)

தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து மக்களவையில் தி.மு.க., பா.ஜனதா மோதலில் ஈடுபட்டது.

புதுடெல்லி,

மக்களவையில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை தொடர்பான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடந்தது. இதில் தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி பேசுகையில், ‘தமிழர்களிடையே இந்தியை திணிப்பதற்கு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 3 முறை முயன்றது. ஆனால் நாங்கள் வெற்றிகரமான போராட்டங்கள் மூலம் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை தடுத்து நிறுத்தினோம்’ என்று கூறினார்.

திராவிடர்களாகிய நாங்கள் 1930-ம் ஆண்டிலிருந்தே இந்தி திணிப்பை எதிர்த்து வருவதாக கூறிய கலாநிதி, எங்கள் மொழி பெருமையை நாங்கள் தொடர்ந்து பாதுகாப்போம் என்றும் தெரிவித்தார். அவருக்கு தி.மு.க. உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோரும் ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் கலாநிதி வீராசாமி கருத்துக்கு பா.ஜனதா எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறும்போது, ‘இந்திதான் இந்தியாவின் பிரதான மொழி. அப்படியிருக்க தி.மு.க. உறுப்பினர் எப்படி இந்திக்கு எதிராக பேச முடியும்?’ என்று கேள்வி எழுப்பினார். மேலும் விளையாட்டுத்துறையை குறித்து பேசும்போது, இந்தி எங்கிருந்து வந்தது? என்றும் வினவினார்.

இவ்வாறு இரு கட்சி உறுப்பினர்களும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.


Next Story