நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்கடிக்கப்படும்: எடியூரப்பா திட்டவட்டம்


நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்கடிக்கப்படும்: எடியூரப்பா திட்டவட்டம்
x
தினத்தந்தி 18 July 2019 5:08 AM GMT (Updated: 18 July 2019 5:09 AM GMT)

நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்கடிக்கப்படும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்- மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசு பதவி ஏற்றதில் இருந்தே பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் அலுவலகத்தில் தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்துவிட்டு பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக திரும்பினார்கள். ஆனால் அவற்றை சபாநாயகர் ரமேஷ்குமார் இதுவரை ஏற்கவில்லை. அத்துடன் மந்திரிகளாக இருந்த இரு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதீய ஜனதா பக்கம் சாய்ந்தனர். 

இதற்கிடையே, தங்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி 15 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்,  15 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம். அதேசமயம், இந்த கோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு 15 எம்.எல்.ஏ.க்களையும் கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்கள் விரும்பினால் சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் அல்லது விலகியும் இருக்கலாம் என்று தீர்ப்பளித்தது. 

இதனால், கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது.  இதற்கிடையே மும்பை சொகுசு விடுதியில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 12 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்து விட்டனர். 

இந்த பரபரப்பான சூழலில், இன்று காலை 11 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக கர்நாடக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை வருகை தந்துள்ளனர். எடியூரப்பா, சித்தராமையா உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர். 

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா,  எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று 101 சதவீதம் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அவர்களுக்கு 100க்கு குறைவான எண்ணிக்கையே உள்ளது. எங்களுக்கு 105 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பு தோற்கடிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார். 

Next Story