கர்நாடக சட்டசபை: 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது


கர்நாடக  சட்டசபை:  3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது
x
தினத்தந்தி 18 July 2019 9:25 AM GMT (Updated: 18 July 2019 10:16 AM GMT)

அதிருப்தி எம் எல் ஏக்கள் சட்டசபைக்கு வந்து கையெழுத்து போடாவிட்டால் எந்த சலுகையும் பெற முடியாது என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.

பெங்களூரு

 கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில்  தனது அரசு மீது நம்பிக்கை கோரி முதலமைச்சர் குமாரசாமி பேசும் போது அவர் கூறியதாவது:-

ராஜினாமா செய்த எம் எல் ஏக்கள் சுயமரியாதை இல்லாதவர்கள். சபாநாயகரின் அதிகாரத்தை கேள்விகுறியாக்கும் வகையில் சில எம் எல் ஏக்கள் செயல்பட்டனர்.

 கர்நாடகாவில் நடப்பதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். சட்டபேரவையில் விவாதம் நடத்த ஏன் பயப்படுகிறீர்கள்.

 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை உடனே ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

கூட்டணி அரசை தொடர்ந்து நடத்துவேனா, இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளிக்க இங்கு நான் வரவில்லை.  ஆட்சையை எப்படியாவது கவிழ்த்து விடவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செயல்படுகின்றனர்.

வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க கூடாது. எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகரிடம் ஒரு வரியில் ராஜினாமா செய்வதாக கூறிவிட்டு, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு காரணங்களை கூறுகின்றனர்.

அரசியல் குழப்பத்திற்கு எம்எல்ஏக்கள் ராஜினாமா தான் காரணம். நாடாளுமன்ற பிரசாரத்தின்போது கூட்டணி ஆட்சி குறித்து தொடக்கம் முதலே சிலர் தவறான தகவல் பரப்பி வருகிறார்கள்.

பாஜக ஆட்சியில் நடந்த  நில ஊழலில் பலர் தப்ப வைக்கப்பட்டு உள்ளனர் 

எடியூரப்பா பேசும் அன்றைய சூழல் வேறு, தற்போதைய நிலை வேறு .ஊழல் குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க நாங்கள் தயார்.எடியூரப்பாவிற்கு திடீரென என் மீது கருணை ஏற்பட்டுள்ளது, அதற்கு நான் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் .எடியூரப்பா ரொம்ப அவசரப்படுகிறார். 11 மாதமாக ஆட்சியை நிலைத்தன்மையற்ற அரசு என்ற பிம்பத்தை ஏற்படுத்தினர்"
அரசு பற்றி மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது  என கூறினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீதான விவாதத்தின் போது கர்நாடக சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

கர்நாடக சட்ட அமைச்சர்  பேசும் போது இந்த விஷயத்தில் உறுப்பினர்கள் தெளிவு பெற வேண்டும்.  கொறடா உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது. 

சபாநாயகர் ரமேஷ் குமார் பேசும் போது கூறியதாவது:-

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் நடவடிக்கை எடுக்கலாம்.  காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் நடவடிக்கை எடுப்பதால் நான் தலையிட மாட்டேன். உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் மிகப்பெரிய அளவில் மதிக்கிறேன்.  அதிருப்தி எம் எல் ஏக்கள் சட்டசபைக்கு வந்து கையெழுத்து போடாவிட்டால்  எந்த சலுகையும் பெற முடியாது என சபாநாயகர்  எச்சரிக்கை விடுத்தார்.

கர்நாடக சட்டபேரவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Next Story