பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 1,023 விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 1,023 விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு
x
தினத்தந்தி 18 July 2019 3:39 PM GMT (Updated: 18 July 2019 3:39 PM GMT)

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவியல் வழக்குகளை விசாரிக்க 1,023 விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது,  கடந்த 2013–ம் ஆண்டு நிர்பயா நிதியம் அமைக்கப்பட்டது. இப்போது வரை, அந்த நிதியம் மூலம், 29 வகையான பெண்கள் பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த மாநிலங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 250 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

 ஆனால், கடந்த 2014–ம் ஆண்டுவரை, காங்கிரஸ் ஆட்சியில், பெண்கள் பாதுகாப்புக்கென ஒரே ஒரு திட்டம் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது. தனி கோர்ட்டுகள் அமைப்பது மாநில அரசுகள் மற்றும் ஐகோர்ட்டுகளின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இருப்பினும், தேசிய பெண்கள் பாதுகாப்பு திட்டப்படி, பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு சம்பவங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ சட்ட குற்றங்கள் ஆகியவற்றை விரைந்து விசாரிக்க வசதியாக நிர்பயா நிதியம் மூலம் 1,023 விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவு ரூ.767 கோடியே 25 லட்சம் ஆகும். நிர்பயா நிதியத்தை மத்திய நிதி அமைச்சகமே நிர்வகிக்கிறது. நிதி ஒதுக்கீட்டுக்கும் ஒப்புதல் அளிக்கிறது எனக் கூறினார்.

Next Story