தேசிய செய்திகள்

குமாரசாமி நம்பிக்கை தீர்மானம் தாக்கல்: கர்நாடக சட்டசபையில் கடும் அமளி - சபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு + "||" + Kumaraswamy filed a trust motion: Karnataka Legislative Assembly - Adjournment of the House throughout the day

குமாரசாமி நம்பிக்கை தீர்மானம் தாக்கல்: கர்நாடக சட்டசபையில் கடும் அமளி - சபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

குமாரசாமி நம்பிக்கை தீர்மானம் தாக்கல்: கர்நாடக சட்டசபையில் கடும் அமளி - சபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். வாக்கெடுப்பு நடத்தும் பிரச்சினை தொடர்பாக கடும் அமளி ஏற்பட்டதால் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். ஆனால் அவர்களுடைய ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. மேலும் மந்திரிகளாக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் இருவர் தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.


இந்த நிலையில், ராஜினாமா செய்த 15 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் என்றும், அதேசமயம் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களில் 13 பேர் காங்கிரசையும், 3 பேர் ஜனதாதளம் (எஸ்) கட்சியையும் சேர்ந்தவர்கள். இவர்களில் 15 பேர் மும்பை சென்று அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவால் தனது அரசுக்கு ஆபத்து இல்லை என்று கூறி வந்த முதல்-மந்திரி குமாரசாமி, சட்டசபையில் 18-ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி மெஜாரிட்டியை நிரூபிக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதனால் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 18-ந்தேதி சட்டசபை கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கொறடாக்கள் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. மும்பை ஓட்டலில் தங்கி இருக்கும் 15 எம்.எல்.ஏ.க்கள் நேற்று சட்டசபை கூட்டத்துக்கு வரவில்லை. மேலும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்களும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஆனால் ராஜினாமா கடிதம் கொடுத்த காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ராமலிங்கரெட்டி மனம் மாறி அரசுக்கு ஆதரவாக திரும்பியதோடு, சட்டசபை கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

காலை 11.15 மணிக்கு சபை கூடியதும் முதல்-மந்திரி குமாரசாமி, தனது தலைமையிலான கூட்டணி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா எழுந்து “முதல்-மந்திரி கொண்டு வந்துள்ள நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது இன்றே வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும்” என்றார்.

அதற்கு சபாநாயகர் ரமேஷ்குமார், “இருதரப்பினரும் பரஸ்பரமாக ஒப்புக்கொண்டால், 5 நிமிடங்களில் வாக்கெடுப்பு நடத்த நான் தயாராக இருக்கிறேன். இதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்றார்.

அதன் பிறகு குமாரசாமி பேசியதாவது:-

எடியூரப்பா மிகவும் அவசரமாக இருப்பதாக தெரிகிறது. ஒரே நாளில் வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அவர் சொல்கிறார். கர்நாடகத்தில் ஜனநாயகத்திற்கு எதிராக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலை எதற்காக வந்தது, காரணம் என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மதிப்புமிக்க சபாநாயகர் பதவிக்கு அவமரியாதை ஏற்படும் நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். சில எம்.எல். ஏ.க்கள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்ததாக சபாநாயகரிடம் கூறி உள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ள ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள், அரசின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்கள். இவற்றுக்கு எல்லாம் பதில் சொல்லாமல் உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியுமா? நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் விஷயத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். விவாதம் நடத்த காலக்கெடு எதுவும் விதிக்க வேண்டாம். இவ்வாறு குமாரசாமி பேசினார்.

அவர் பேசி முடித்ததும் சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா எழுந்து, 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவில் விவரம் கேட்க வேண்டி இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றார்.

அப்போது உணவு இடைவேளைக்காக சபை ஒத்திவைக்கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு சபை மீண்டும் கூடியபோது, பாரதீய ஜனதா உறுப்பினர்கள் எழுந்து, சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி பேசினர். இதற்கு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் குறித்து பாரதீய ஜனதா உறுப்பினர்கள் கூறிய கருத்தை கண்டித்து காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் உறுப்பினர்கள் சபையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் ரமேஷ்குமார் சபையை அரை மணி நேரம் ஒத்திவைத்தார்.

இதற்கிடையே, பாரதீய ஜனதா தலைவர்கள் கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து இன்றே (அதாவது நேற்று) நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்துமாறு சபாநாயகருக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி மனு ஒன்றை அளித்தனர்.

அதை ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பை நேற்றைய தினமே நடத்தி முடிக்குமாறு கூறி சபாநாயகருக்கு கவர்னர் கடிதம் அனுப்பினார்.

அரை மணி நேரம் ஒத்திவைப்புக்கு பிறகு சபை மீண்டும் கூடியதும் சபாநாயகர், கவர்னர் கடிதம் அனுப்பி இருக்கும் தகவலை தெரிவித்தார். அப்போது அவர், கவர்னர் அனுப்பி இருக்கும் கடிதத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு பணிகளை இன்று (நேற்று) ஒரே நாளில், அதாவது இரவு 12 மணிக்குள் நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என்று கூறினார்.

கவர்னரின் இந்த கடிதத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபை நடவடிக்கையில் தலையிட கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று அப்போது அவர்கள் கூறினார்கள்.

அதற்கு சபாநாயகர் ரமேஷ்குமார், “நான் யாருடைய அழுத்தத்திற்கும் பணிய மாட்டேன். சட்டப்படி எனது பணிகளை செய்கிறேன். இங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்து கவர்னருக்கு தெரிவித்துள்ளேன்” என்றார்.

அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து, சபாநாயகர் உடனே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதற்கு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

இதனால் சபையில் கூச்சல்- குழப்பம் ஏற்பட்டது. ஒரே சமயத்தில் பல உறுப்பினர்கள் பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது சபாநாயகர் இருக்கையில் இருந்த துணை சபாநாயகர் கிருஷ்ணா ரெட்டி, அவர்களை நோக்கி, இருக்கையில் அமரும்படி வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் அதற்கு பலன் இல்லை. தொடர்ந்து அமளி நிலவியதால் மாலை 6 மணி அளவில் துணை சபாநாயகர் கிருஷ்ணாரெட்டி சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடுகிறது.

சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட போதிலும் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேற மறுத்துவிட்டனர். சட்டசபையில் தூங்கினர்.

“நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த கோரி பாரதீய ஜனதா உறுப்பினர்கள் சட்டசபை கூட்ட அரங்கத்திற்குள்ளேயே இரவு முழுவதும் இருப்பார்கள்” என்று எடியூரப்பா அறிவித்தார். அதன்படி அக்கட்சி உறுப்பினர்கள் கூட்ட அரங்கத்திலேயே படுத்து தூங்கினர்.


தொடர்புடைய செய்திகள்

1. சி.டி.யை நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்ய தைரியம் இருக்கிறதா? பா.ஜனதாவினருக்கு டுவிட்டர் மூலம் குமாரசாமி பதிலடி
மங்களூரு கலவரம் தொடர்பாக நான் வெளியிட்டுள்ள சி.டி.யை நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்ய பா.ஜனதாவினருக்கு தைரியம் இருக்கிறதா? என்று டுவிட்டர் மூலம் குமாரசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
2. பா.ஜனதாவில் இருந்து 20 எம்.எல்.ஏ.க்கள் விலக தயார்; குமாரசாமி பரபரப்பு பேட்டி
பா.ஜனதாவில் இருந்து விலக 20 எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளனர் என்று குமாரசாமி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
3. போராட்டங்கள் மூலம் பதவிக்கு வந்ததை எடியூரப்பா மறந்து விட்டார்; குமாரசாமி விமர்சனம்
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் குறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
4. அரசியல் சாசனத்தை சிதைக்கும் இந்திய குடியுரிமை சட்டம்; மத்திய அரசுக்கு குமாரசாமி கண்டனம்
இந்திய குடியுரிமை சட்டம் அரசியல் சாசனத்தை சிதைப்பதாக உள்ளது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
5. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 4-வது நாளில் 144 பேர் வேட்பு மனு தாக்கல்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 4-வது நாளில் 144 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.