தேசிய செய்திகள்

பாபர் மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்தில் முடிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + babri demolition case deliver judgment 9 months extend term trial judge

பாபர் மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்தில் முடிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பாபர் மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்தில் முடிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பாபர் மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் விசாரித்து முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுடெல்லி,

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கை 9 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ராஜஸ்தானில் தற்போது கவர்னராக இருக்கும் கல்யாண் சிங் உள்ளிட்டோரை விடுவித்து கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. அதன்பேரில், அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க 2017-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ரேபரேலி கோர்ட்டில் நடந்து வந்த வழக்கு விசாரணையை லக்னோவில் உள்ள அயோத்தி விவகாரங்களுக்கான தனி கோர்ட்டுக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டது. தினசரி விசாரணை நடத்தி, 2 ஆண்டுகளுக்குள் விசாரணையை முடிக்கு மாறும் உத்தரவிடப்பட்டது.

லக்னோ தனிக்கோர்ட்டில் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ், வருகிற செப்டம்பர் 30-ந் தேதி ஓய்வுபெறுகிறார். இந்த தகவலை கடந்த மே மாதம் கடிதம் மூலம் சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியப்படுத்திய அவர், வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 6 மாத காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், சூரிய காந்த் ஆகியோர் அமர்வில் நேற்று நடைபெற்றது.

விசாரணை தொடங்கியதும் பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் தனிக்கோர்ட்டு நீதிபதியின் பதவி காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் உறுதிப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்தல், குறுக்கு விசாரணை ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கின் தீர்ப்பை தனிக்கோர்ட்டு 9 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

தனிக்கோர்ட்டு நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு வழங்கி உத்தரபிரதேச அரசு நான்கு வாரங்களுக்குள் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும், அந்த நான்கு வாரங்களில் தனிக்கோர்ட்டு நீதிபதி, நிர்வாக ரீதியாக ஐகோர்ட்டு கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவார் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.