அணைகள் திறப்பால் வெள்ளப்பெருக்கு - கேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலி


அணைகள் திறப்பால் வெள்ளப்பெருக்கு - கேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலி
x
தினத்தந்தி 20 July 2019 8:30 PM GMT (Updated: 20 July 2019 7:42 PM GMT)

கேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலியாகினர். மேலும் அணைகள் திறப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 5 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தொடர் மழையால் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டு உள்ளது. பல அணைகள் நேற்று திறக்கப்பட்டதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த தொடர் மழைக்கு மாநிலத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் குமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த 18-ந்தேதி கொல்லம் மாவட்டத்தின் நீண்டகரையில் இருந்து மீன்பிடிக்க சென்றிருந்தனர். கடல் கொந்தளிப்பு காரணமாக இவர்களின் படகு மூழ்கி மீனவர்கள் மாயமானார்கள். இதில் 2 பேர் கரை திரும்பிய நிலையில் மீதமுள்ள 3 பேரின் நிலை குறித்து தெரியவில்லை.

இதைப்போல விழிஞ்ஞத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயமாகினர். மேலும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலரும் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Next Story