கேரளாவில் கனமழை; பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை, 4 பேர் உயிரிழப்பு


கேரளாவில் கனமழை; பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை,  4 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 21 July 2019 2:34 PM GMT (Updated: 21 July 2019 2:34 PM GMT)

கேரளாவில் கனமழை பெய்து வருகிறது, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமாக பெய்ய தொடங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதால் 4 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக ஆற்றில் நீரின் அளவு உயரலாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலும் கொந்தளிப்பாக காணப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் உள்பட 4 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். 3 பேர் மாயமாகியுள்ளனர். கடல்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என மாநில அரசு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் ஜூலை 21-ம் தேதி காசர்கோடு மற்றும் இடுக்கி மாவட்டங்களிலும், 22-ம் தேதி கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களிலும் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 23-ம் தேதி கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று கணித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அரசு நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.


Next Story