அயோத்தி விவகாரம்: முஸ்லிம் வாரிய பொதுச்செயலாளருடன் சமரச குழு சந்திப்பு


அயோத்தி விவகாரம்: முஸ்லிம் வாரிய பொதுச்செயலாளருடன் சமரச குழு சந்திப்பு
x
தினத்தந்தி 21 July 2019 10:01 PM GMT (Updated: 21 July 2019 10:01 PM GMT)

அயோத்தி விவகாரம் தொடர்பாக, முஸ்லிம் வாரிய பொதுச்செயலாளருடன் சமரச குழுவினர் சந்தித்தனர்.

லக்னோ,

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சமரச குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்து உள்ளது. இந்த குழுவினர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் பொதுச்செயலாளர் மவுலானா வாலி ரெஹ்மானியை நேற்று சந்தித்து பேசினர். அதன்படி சமரச குழுவின் தலைவரும், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியுமான இப்ராகீம் கலிபுல்லா, உறுப்பினர் வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் ரெஹ்மானியை சந்தித்தனர். குழுவின் மற்றொரு உறுப்பினரும், ஆன்மிக குருவுமான ரவிசங்கர் இதில் கலந்து கொள்ளவில்லை.

இந்த சந்திப்பை ரெஹ்மானி உறுதி செய்தார். அவர் மேலும் கூறுகையில், ‘சமரச விவகாரத்தை பொறுத்தவரை, இந்த குழுவுக்கு உதவி செய்ய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் தயாராக இருக்கிறது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். எங்களுக்கு வேறு எந்த விருப்பமும் இல்லை’ என்று தெரிவித்தார்.


Next Story