கேரளாவில் பருவமழை தீவிரம்: 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


கேரளாவில் பருவமழை தீவிரம்: 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 July 2019 10:08 PM GMT (Updated: 21 July 2019 10:08 PM GMT)

கேரளாவில் பருவமழை தொடர்ந்து தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் 4 மாவட்டங்களுக்கு நாளை வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் காசர்கோடு, இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வரை வெள்ள அபாய எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது.

திருவனந்தபுரம் சங்குமுகம் கடற்கரைக்கு அருகில் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என கேரள அரசு எச்சரித்துள்ளது. அதேபோல இடுக்கியில் கடந்த சனிக்கிழமை லேசான நிலச்சரிவு ஏற்பட்டதால், மலைப்பகுதிகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் இதுவரை 12 நிவாரண முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் 13 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 71 வீடுகள் பகுதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட வீடுகளில் வசித்துவந்த பலர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். பலர் தங்கள் உறவினர் வீடுகளுக்கு குடிபெயர்ந்தனர்.

பெரியாறு, பம்பா, சாலியாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரியங்கோடு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அதன் அருகில் உள்ள 50 வீடுகளை சேர்ந்தவர்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். காசர்கோடு மாவட்டத்தில் 9 சென்டி மீட்டரும், கண்ணூர் மாவட்டத்தில் 9.7 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது.

விழிஞ்ஞம் பகுதியில் கடலில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் படகில் ஏற்பட்ட கோளாறால் காணாமல்போனார்கள். அவர்கள் பாதுகாப்பாக திரும்பினார்கள். போதிய உணவு கொண்டுசெல்லாததால் பாதிக்கப்பட்டிருந்த 4 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுவரை மழை மற்றும் கடல் சீற்றத்துக்கு 2 தமிழக மீனவர்கள் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தின் குமரி மாவட்டத்தை சேர்ந்த சகாயராஜ் (வயது 55) என்பவரின் உடல் நேற்று கொல்லம் மாவட்டத்தில் கரை ஒதுங்கியது. 2 மீனவர்கள் பாதுகாப்பாக நீந்தி கரைசேர்ந்தனர். மேலும் மாயமான 2 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.


Next Story