சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி- பிரதமர் வாழ்த்து


சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி-  பிரதமர் வாழ்த்து
x
தினத்தந்தி 22 July 2019 10:47 AM GMT (Updated: 22 July 2019 10:47 AM GMT)

சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்-பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி

நிலவின் தென்துருவ பகுதியை இதுவரை எந்த நாடும் ஆராய்ந்தது இல்லை.  அந்த வேலையை ரூ.1,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின்  ‘சந்திரயான்-2’ விண்கலம் செய்யப்போகிறது.

இந்த விண்கலத்தை ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் மூலம் கடந்த 15-ந்தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ‘கவுண்டவுனும்’ நடந்து வந்தது. ஆனால் ராக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறால் கடைசி நிமிடத்தில் ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஏவுவது நிறுத்தப்பட்டது.

தற்போது அந்த கோளாறை விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் சரி செய்து விட்டனர். இதையடுத்து இன்று ‘சந்திரயான்-2’ விண்கலத்துடன், ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது.

இதன்படி, ‘சந்திரயான்-2’ விண்கலம் வெற்றிகரமுடன் விண்ணில் ஏவப்பட்டது.  இதனை தொடர்ந்து, ‘சந்திரயான்-2’ விண்கலம் இறங்குவதற்கான முதற்கட்டம் வெற்றி பெற்றுள்ளது. சிறப்புடன் நீள் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.  புவி சுற்று வட்டப்பாதையை 16 நிமிடங்களில் சென்றடைந்தது.

சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்தார்.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திரயான் -2 ஐ வெற்றிகரமாக ஏவியது வரலாற்று ரீதியாக ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் தருணம். திட்டத்தை முன்னெடுத்த இஸ்ரோ அனைத்து விஞ்ஞானிகளுக்கும்  பொறியியலாளர்களுக்கும் வாழ்த்துக்கள். தொழில்நுட்பத்தின் புதிய துறைகளில் 'இஸ்ரோ' புதிய உயரங்களை எட்ட விரும்புகிறேன்.

இப்போதிலிருந்து சுமார் 50 நாட்களில் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கும் முதல் விண்கலம் சந்திரயான் -2 ஆகும். இந்த நோக்கம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் மற்றும் நமது அறிவு அமைப்புகளை வளமாக்கும் என்று நம்பப்படுகிறது. சந்திரயான்-2 வெற்றி பெற விரும்புகிறேன். என கூறி உள்ளார்.




சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது;-

ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது. நிலவு குறித்த கூடுதல் தகவல்களை இனி அறிந்து கொள்ள முடியும். எங்கள் புகழ்பெற்ற  வரலாற்றின் ஆண்டுகளில் பொறிக்கப்படும் சிறப்பு தருணங்கள்!

சந்திரயான்-2 நமது விஞ்ஞானிகளின் வலிமையையும், விஞ்ஞானத்தின் புதிய எல்லைகளை அளவிட 130 கோடி இந்தியர்களின் உறுதியையும் விளக்குகிறது என கூறி உள்ளார்.



சந்திரயான்-2 வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மக்களவை, மாநிலங்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோரும் வாழ்த்து  தெரிவித்து உள்ளனர்.

Next Story