நாடாளுமன்றத்தில் மனித உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேறியது


நாடாளுமன்றத்தில் மனித உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேறியது
x
தினத்தந்தி 22 July 2019 3:25 PM GMT (Updated: 22 July 2019 3:25 PM GMT)

நாடாளுமன்றத்தில் மனித உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா இன்று நிறைவேறியது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த வெள்ளி கிழமை மனித உரிமைகள் பாதுகாப்பு (திருத்த) மசோதா 2019 நிறைவேற்றப்பட்டது.  இதனை தொடர்ந்து மேலவையில் இந்த மசோதா மீது இன்று விவாதம் நடந்தது.  தேசிய மனித உரிமைகள் அமைப்பு மற்றும் மாநில உரிமைகள் அமைப்புகளுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்யும் பணியை வேகப்படுத்துவதற்கு இந்த மசோதா வழிவகை செய்யும்.

இந்த விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, குழுவில் நியமனம் செய்யப்படுவோரின் பதவி காலம் குறைக்கப்படுகிறது என கூறினார்.  இதனால் தேசிய மற்றும் மாநில அளவிலான மனித உரிமைகள் அமைப்புகளின் தலைவர்களாக இருப்போரின் பதவி காலம் ஆனது, நடைமுறையில் உள்ள 5 வருடங்கள் என்பதில் இருந்து 3 வருடங்களாக குறைக்கப்படுகிறது.

இதேபோன்று, நடைமுறையிலுள்ள முன்னாள் இந்திய தலைமை நீதிபதியுடன், சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி ஒருவரும் தேசிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவராக முடியும்.

இந்த நியமனங்களில் அரசின் தலையீடு இருக்க கூடும் என்று எதிர்க்கட்சியினர் சந்தேகம் கொள்ள தேவையில்லை என்றும் ஷா கூறினார்.  இதன்பின் மேலவையில் குரல் ஓட்டெடுப்பின் வழியே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.  இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மனித உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா முறைப்படி நிறைவேறியுள்ளது.

Next Story