கேரளாவில் மாணவர்கள் பேரணியில் வன்முறை - போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு


கேரளாவில் மாணவர்கள் பேரணியில் வன்முறை - போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு
x
தினத்தந்தி 22 July 2019 8:23 PM GMT (Updated: 22 July 2019 8:23 PM GMT)

கேரள பல்கலைக்கழக பிரச்சினையை கண்டித்து நடந்த மாணவர்கள் பேரணியின்போது வன்முறை வெடித்தது. இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரத்தில் கேரள பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர் அமைப்புகளுக்குள் ஏற்பட்ட தகராறில் பி.ஏ. இறுதி ஆண்டு படித்த மாணவர் அகில் கத்தியால் குத்தப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து மாணவ - மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை கத்தியால் குத்தியதாக எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பின் தலைவர் சிவரஞ்சித், செயலாளர் நசீம் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் நடக்கும் இதுபோன்ற செயல்கள் குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி கேரள மாணவர் சங்க மாநில தலைவர் அபிஜித் 8 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இந்தநிலையில் இடுக்கி எம்.பி. குரியகோஸ் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் மற்றும் கேரள மாணவர் சங்கத்தினர் பல்கலைக்கழகத்தில் செயல்படும் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ.யை கண்டித்து நேற்று தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

அப்போது போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி அவர்கள் தலைமைச் செயலகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.

Next Story