வரதட்சணை கொடுத்ததற்காக பெண்ணின் தந்தை மீது வழக்கு


வரதட்சணை கொடுத்ததற்காக பெண்ணின் தந்தை மீது வழக்கு
x
தினத்தந்தி 22 July 2019 8:29 PM GMT (Updated: 22 July 2019 8:29 PM GMT)

வரதட்சணை கொடுத்ததற்காக பெண்ணின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஜோத்பூர்,

ராஜஸ்தானின் ஜோத்பூரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ராம்லால் என்பவர் தனது மகள் மனிஷாவை, கைலாஷ் என்பவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தார். மனிஷாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கைலாஷின் தந்தை மற்றும் உறவினர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர்.

இது தொடர்பாக போலீசில் ராம்லால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஜோத்பூர் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் ஆஜரான ராம்லால், தனது மகளுக்கு திருமணத்தின் போது ரூ.1 லட்சம் ரொக்கம் உள்பட போதுமான வரதட்சணை கொடுத்ததாக கூறினார்.

இதைத்தொடர்ந்து கைலாஷ் தரப்பு வக்கீல் பிரஜேஷ் பரீக், ‘வரதட்சணை வாங்குவது குற்றம் என்றால், கொடுப்பதும் குற்றமாகும். எனவே வரதட்சணை கொடுத்த குற்றத்திற்காக ராம்லால் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என வாதாடினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரிச்சா சவுத்ரி, ராம்லால் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story