கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு கார் பரிசை ஏற்க மறுத்த பெண் எம்.பி.


கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு கார் பரிசை ஏற்க மறுத்த பெண் எம்.பி.
x
தினத்தந்தி 22 July 2019 8:40 PM GMT (Updated: 22 July 2019 8:40 PM GMT)

கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு கார் பரிசை பெண் எம்.பி. ஏற்க மறுத்தார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் ரம்யா அரிதாஸ். இவர், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆலத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.ஆனார். கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் தலித் இனத்தை சேர்ந்த ஒரே பெண் எம்.பி. என்ற சிறப்பை இவர் பெற்றார். இதனால் அவருக்கு இளைஞர் காங்கிரஸ் உதய தினமான வருகிற ஆகஸ்டு 9-ந் தேதி ஒரு காரை பரிசாக வழங்க தொண்டர்கள் முடிவு செய்தனர். இதனை அவர் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

இதற்காக தொண்டர்களிடம் நன்கொடையாக ரூ.14 லட்சம் வசூல் செய்து ஒரு காரை வாங்கினர். இந்த தகவல் அம்மாநில கங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமசந்திரன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. “கார் வேண்டுமனால் கடன் பெற்று வாங்கிக்கொள்ளலாம். தொண்டர்களிடம் இருந்து நன்கொடை வசூல் செய்து காரை பரிசாக பெறுவது சரியல்ல,” என்றார் அவர்.

அதைத்தொடர்ந்து ரம்யா அரிதாஸ் எம்.பி. கூறும்போது, “தொண்டர்களின் ஆர்வத்திற்காக நான் காரை பரிசாக பெற்றுக்கொள்ள முதலில் சம்மதம் தெரிவித்தேன். தற்போது கட்சி தலைமையின் கருத்தை மதித்து எனது முடிவை மாற்றிக்கொண்டேன்” என்று அவரது முகநூல் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

Next Story