ஈரோடு மாநகராட்சி மேயர் பதவியை மகளிருக்கு ஒதுக்க கோரி வழக்கு: தமிழக தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


ஈரோடு மாநகராட்சி மேயர் பதவியை மகளிருக்கு ஒதுக்க கோரி வழக்கு: தமிழக தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 July 2019 8:53 PM GMT (Updated: 22 July 2019 8:53 PM GMT)

ஈரோடு மாநகராட்சி மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் மாநில தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

ஈரோட்டைச் சேர்ந்த ராதாமணி பாரதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில், தமிழ்நாடு மாநில தேர்தல்ஆணையத்துக்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 2016-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள் இருந்தன. அப்போது, மற்ற மாநகராட்சிகளை விட ஈரோட்டில் குறைந்த அளவு மகளிர் இருந்ததால் ஈரோடு மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 12-ல் இருந்து 15 ஆக உயர்த்தப்பட்டது.

இந்தநிலையில் இந்த மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கு மகளிருக்கான இட ஒதுக்கீடு 6-ல் இருந்து 8 ஆக உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த கோரி தொடரப்பட்ட வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் ஈரோடு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்துவதற்கு முன்பு மேயர் பதவிக்கான இடத்தை மகளிருக்கு ஒதுக்கீடு செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் ராதாமணி பாரதி தரப்பில் மூத்த வக்கீல் மோகனா ஆஜரானார். விசாரணை தொடங்கியதும் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.


Next Story