காஷ்மீர் இரு தரப்பு விவகாரம்; 3வது நபர் தலையிட முடியாது: காங்கிரஸ் கட்சி


காஷ்மீர் இரு தரப்பு விவகாரம்; 3வது நபர் தலையிட முடியாது:  காங்கிரஸ் கட்சி
x
தினத்தந்தி 23 July 2019 7:03 AM GMT (Updated: 23 July 2019 7:03 AM GMT)

காஷ்மீர் இரு தரப்பு விவகாரம் என்றும் அதில் 3வது நபர் தலையிட முடியாது என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

புதுடெல்லி,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தால், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த ராணுவ நிதியுதவியை அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ள நிலையில், இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் இம்ரான் கான் அமெரிக்கா சென்றார்.

தலைநகர் வாஷிங்டனில் அதிபர் அதிபர் டொனால்டு டிரம்பை இம்ரான் கான் சந்தித்து பேசினார். அப்போது, பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய டிரம்ப், காஷ்மீர் பிரச்சினையில் சுமுக தீர்வை ஏற்படுத்த உதவுமாறு இந்திய பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக கூறினார்.

இதுதொடர்பாக மோடியிடம் பேசவிருப்பதாக கூறிய அவர், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தராக செயல்படவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம், பிரதமர் மோடி கேட்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, நாடாளுமன்றத்தில் உள்ள குலாம் நபி ஆசாத்தின் அறையில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று ஒன்றாக கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.  காஷ்மீர் விவகாரத்தில் டிரம்பின் அறிக்கை பற்றி இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் தரவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கேட்டு கொண்டனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், கடந்த காலங்களில் மத்தியில் எந்த அரசு அதிகாரத்தில் இருந்தது என்பது விசயம் அல்ல.  காஷ்மீர் இரு தரப்பு விவகாரம் என்பது நமது வெளியுறவு கொள்கை.  அதில் 3வது நபர் தலையிட முடியாது.  இது அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் தெரியும்.  அதனால், மத்தியஸ்தம் செய்யும்படி இந்திய பிரதமர் கேட்டு கொண்டார் என பாகிஸ்தான் பிரதமரிடம் டிரம்ப் கூற முடியும் என நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

Next Story