கர்நாடக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி


கர்நாடக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி
x
தினத்தந்தி 23 July 2019 2:18 PM GMT (Updated: 23 July 2019 2:18 PM GMT)

கர்நாடக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை தழுவியது.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்றது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதில் ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ. தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றுவிட்டார். மற்ற 15 எம்.எல்.ஏ.க்களும் எக்காரணம் கொண்டு ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். இதனால் முதல்-மந்திரி குமாரசாமி கடந்த 18-ம் தேதி தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். 

அந்த தீர்மானத்தின் மீதான விவாதம் சட்டசபையில் நடந்து வந்தது. இதற்கிடையே கடந்த 19-ம் தேதியே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமிக்கு, கவர்னர் வஜூபாய்வாலா உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை குமாரசாமி புறக்கணித்தார். இதற்கிடையே சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் அரசு விடுமுறைக்கு பிறகு நேற்று காலை சட்டசபை கூடியது. விவாதம் நடைபெற்றது. நேற்று இரவு 11 மணிக்கு மேலும் விவாதம் தொடர்ந்து நடைபெற்றது.  இதற்கிடையே ராஜினாமா செய்துள்ள 15 எம்.எல்.ஏ.க் களை தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் காங்கிரஸ் மனு வழங்கியது. 

கொறடா உத்தரவு பிறப்பித்தும் அந்த 15 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருந்து வருகிறார்கள். உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நேற்று நோட்டீசு அனுப்பினார்.  இன்று விளக்கம் அளிக்க கோரினார். இன்று அவை காலை தொடங்கியதும் தீர்மானம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. முதல்வர் குமாரசாமி பேசுகையில், கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என உருக்கமாக கூறினார்.

நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி. நான் வாழ்கையில் பல தவறுகளை செய்துள்ளேன், நல்ல விஷயங்கள் பல செய்துள்ளேன். நான் என்றும் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டது கிடையாது, நான் திருமணம் செய்தபோது எனது மனைவி என்னிடம் வாங்கிய முதல் சத்தியம் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது தான். காலத்தின் கட்டாயத்தால் நான் அரசியலில் நுழைந்தேன், அதே கட்டாயத்தின்பேரில் எனது மனைவியும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது என் முன்பு அமர்ந்துள்ளார். எனது ஆட்சியில் பங்குகொண்டு கடுமையாக உழைத்த அனைத்து அதிகாரிகளுக்கும் தலை தாழ்ந்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பேசினார். 

இதற்கிடையே பெங்களூருவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இன்று மாலை 6 மணி முதல் தடை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.  அனைத்து மதுபானக் கடைகளும், பார்களையும் மூட உத்தரவிடப்பட்டது.

நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் கர்நாடக சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் எம்.எல்.ஏ.க்கள் பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் தங்கியிருக்கும் நிலையில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. அவையில் காங்கிரஸ், மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.  சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை தழுவியது. குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 எம்.எல்.ஏ.க்களும், எதிராக 105 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்துள்ளனர். இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. தென்னிந்தியாவில் காங்கிரஸ் கூட்டணி கர்நாடகாவில் ஆட்சியை இழக்கிறது. 

Next Story