பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க வந்த சிறுமியிடம் அநாகரிகமாக பேசிய போலீசார் -பிரியங்கா கண்டனம்


பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க வந்த சிறுமியிடம் அநாகரிகமாக பேசிய போலீசார் -பிரியங்கா கண்டனம்
x
தினத்தந்தி 25 July 2019 10:37 AM GMT (Updated: 25 July 2019 11:32 AM GMT)

உ.பி.யில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க வந்த சிறுமியிடம் அநாகரிகமாக பேசிய போலீசாரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கான்பூரில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில்   புகார் கொடுக்க சென்றுள்ளார். சிறுமி தனக்கு நடந்தவையை விவரித்த போது அங்கிருந்த கான்ஸ்டபிள் கேலி செய்துள்ளார். அநாகரிகமான முறையில் சிறுமியிடம் பேசியுள்ளார். அவர் அணிந்திருந்த நகைகளை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். இத்தனை மோதிரம், கம்மல், நெக்லைஸ் போட்டிருக்க, இதெல்லாம் எதற்கு? இவையெல்லாம் நீ யார் என்பதை காட்டுகிறது என அந்த  கான்ஸ்டபிள் கூறியுள்ளார். இதனை சிறுமியின் சகோதரர் வீடியோ  எடுத்துள்ளார். சம்பவத்தின்போது சிறுமியின் பெற்றோர்கள் தலையிட முயற்சி செய்துள்ளனர். ஆனால் போலீசார் அவர்களை மிரட்டியுள்ளார். வழக்குப்பதிவு செய்யவில்லை. இதுதொடர்பான வீடியோ வெளியானதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட போலீசாரும் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 

இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள  டுவிட் செய்தியில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். புகாரளிக்க வந்த பெண்ணிடம் நடந்துக்கொள்வதை பாருங்கள், ஒருபுறம் பெண்களுக்கு எதிரான வன்முறை உ.பி. குறையாமல் செல்கிறது. மறுபுறம் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் இப்படி நடந்துக்கொள்கிறார்கள் என பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார். 

சிறார்கள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரிப்பு மற்றும் இதுதொடர்பான  வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்குவதை கவனத்தில் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொள்கிறது. 100-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகளை கொண்ட மாவட்டங்களில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது.

Next Story