சபாநாயகர் நாற்காலியில் இருந்த பெண் எம்.பி.யை நோக்கி அசாம் கான் சர்ச்சை பேச்சு


சபாநாயகர் நாற்காலியில் இருந்த பெண் எம்.பி.யை நோக்கி அசாம் கான் சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 25 July 2019 2:27 PM GMT (Updated: 25 July 2019 2:27 PM GMT)

மக்களவையில் சபாநாயகர் நாற்காலியில் இருந்த எம்.பி.யை நோக்கி சமாஜ்வாடி எம்.பி. அசாம் கான் அநாகரிகமாக பேசியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மக்களவையில் முத்தலாக் தடை மசோதா தொடர்பாக விவாதம் நடைபெற்ற போது சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. அசாம் கான் கலந்து கொண்டு பேசினார். ஆளும் கட்சியினரை குறிவைத்து பேசியுள்ளார்.  அப்போது சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்திருந்த பா.ஜனதா எம்.பி. ராமா தேவி, அசாம் கானை நோக்கி பிற உறுப்பினர்களை பார்த்து பேச வேண்டாம்.  என்னை பார்த்து பேசலாம் எனக் கூறினார். இதனையடுத்து ராமா தேவியை நோக்கி ஆட்சேபகரமான கருத்துக்களை அசாம்கான் வெளியிட்டார். உடனடியாக அவையில் இருந்த மந்திரி ரவிசங்கர் பிரசாத் மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால், அசாம் கானை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் என ராமா தேவியிடம் கேட்டுக் கொண்டனர். 

இதனை ராமா தேவி கேட்டபோது, உங்களை அவமதிக்கும் நோக்கில் பேசவில்லை, நீங்கள் என்னுடைய சகோதரியை போன்றவர் என சமாளித்தார். உடனடியாக சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், அசாம் கானுக்கு ஆதரவை தெரிவித்தார்.  இதற்கிடையே சபாநாயகர் ஓம் பிர்லா அவைக்கு வந்தார். அவை நடவடிக்கையை தொடங்கினார். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் புகார்களை தெரிவித்துவிட்டு வெளிநடப்பு செய்தனர். அசாம் கானின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என ஓம் பிர்லா கூறினார். அசாம் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் நான் எதுவும் தவறாக பேசவில்லை, என்னால் மன்னிப்பு கேட்க முடியாது. என்னுடைய பணியை வேண்டுமென்றால் விட்டுச் செல்கிறேன் எனக் கூறிவிட்டார் அசாம் கான். 

Next Story