முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு; ‘கும்பல் கொலை, ஆணவக்கொலையை தடுக்க சட்டம் வேண்டும்’ - நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்


முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு; ‘கும்பல் கொலை, ஆணவக்கொலையை தடுக்க சட்டம் வேண்டும்’   - நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 July 2019 11:46 PM GMT (Updated: 25 July 2019 11:46 PM GMT)

கும்பல் கொலை மற்றும் ஆணவக்கொலைகளை தடுக்க உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என கனிமொழி எம்.பி. நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

புதுடெல்லி, 

மக்களவையில் நேற்று முத்தலாக் தடை மசோதா மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

முத்தலாக் தடை மசோதாவில் அப்பட்டமான குறைபாடுகள் உள்ளன. இது பிரிவினை மற்றும் பாகுபாடுகள் நிறைந்தது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதால்தான் மாநிலங்களவையில் கிடப்பில் உள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் மீண்டும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது மோசடித்தனம் ஆகும்.

முத்தலாக் விவகாரம் சிவில் பிரச்சினையாக பார்க்கப்படும் போது, அது எப்படி குற்றவியல் சம்பவம் ஆகும்? இந்த விவகாரத்தில் ஆண்களின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். ஏனெனில் ஆண்களின் உரிமையும் அடங்கியதுதான் பெண் உரிமையாகும்.

இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களின் மீது கரிசனம் இல்லாதபோது, முஸ்லிம் பெண்களின் நலனில் மட்டும் மத்திய அரசு கவலை கொள்வதேன்? ஏன் முஸ்லிம் ஆண்கள் மட்டும் துன்புறுத்தப்படுகின்றனர்? முஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் அளவுக்கு குடும்ப வன்முறை சட்டங்கள் எல்லாம் வலிமையாக இருக்கின்றன.

முத்தலாக் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஆதரிக்கிற மத்திய அரசு, சபரிமலை விவகாரத்தில் மட்டும் எதிர்ப்பது ஏன்? சபரிமலையில் பெண்கள் நுழைவதை ஏன் தடுக்கிறார்கள்? இந்த விவகாரத்தில் பா.ஜனதா அமைதியாக இருப்பது ஏன்?

முத்தலாக் மசோதா ஒரு பிரிவினரை மட்டும் இலக்காக கொண்டு இருக்கிறது. இந்த மசோதா சரியான பாதையை வகுக்காது. எனவே இதை நாங்கள் எதிர்க்கிறோம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆணவக்கொலைகள் நடக்கின்றன. இது தொடர்பாக ஒவ்வொரு நாளும் செய்திகள் வருகின்றன. இதை தடுப்பதற்கு என்ன சட்டங்கள் கொண்டு வருகிறோம்? இளைஞர்கள், இளம்பெண்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகின்றனர். எனவே ஆணவக்கொலைகளை தடுக்க ஒரு மசோதா கொண்டு வர வேண்டும்.

மேலும் கும்பல் கொலைகளை தடுக்கவும் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். இது தற்போதைய உடனடி தேவை ஆகும்.

இதைப்போல மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த மத்திய அரசு, 2–வது முறையாக பதவிக்கு வந்த பிறகும் இன்னும் கொண்டு வரப்படவில்லை.

மகளிருக்கான பிரச்சினைகளை பெண் உறுப்பினர்கள் விவாதிக்க வேண்டும். எங்களுக்கு எது சரி? என்று ஆண்கள் கூறுவதை நாங்கள் விரும்பவில்லை.

இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

இதைப்போல பாரத ஸ்டேட் வங்கி தேர்வில் உயர்வகுப்பு ஏழைகளுக்கான கட்–ஆப் மதிப்பெண் குறைத்திருக்கும் விவகாரம் குறித்தும் மக்களவையில் கனிமொழி எம்.பி. எதிர்ப்பை பதிவு செய்தார்.

இது குறித்து அவர் பேசும்போது, ‘பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தபோதே இப்படியெல்லாம் நடக்கும் என்று நாங்கள் எச்சரித்து இருந்தோம். இதன்மூலம் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான வாய்ப்புகள் பறிக்கப்பட்டு இருக்கின்றன. இது சமூக அநீதியின் கொடுமைமிக்க வடிவமாக உள்ளது. அரசியல் அமைப்புக்கும் எதிரானது’ என்று தெரிவித்தார்.


Next Story