தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் ‘முத்தலாக்’ தடை மசோதா நிறைவேறியது + "||" + Amidst opposition from the opposition In Lok Sabha Muttalak ban bill Fulfilled

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் ‘முத்தலாக்’ தடை மசோதா நிறைவேறியது

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் ‘முத்தலாக்’ தடை மசோதா நிறைவேறியது
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் ‘முத்தலாக்’ தடை மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதுடெல்லி, 

திருமணமான முஸ்லிம் ஆண், தன் மனைவியை 3 முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருந்து வந்தது. இது தொடர்பான ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, ‘‘இந்த நடைமுறை சட்ட விரோதம்’’ என 2017–ம் ஆண்டு, ஆகஸ்டு 17–ந் தேதி தீர்ப்பு அளித்தது. அத்துடன், ‘முத்தலாக்’ நடைமுறைக்கு தடை விதித்து நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறியது.

அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவையில் இதற்கான மசோதா, ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் கொண்டு வந்து, அதே ஆண்டு டிசம்பர் 28–ந் தேதி நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

அதன்பின்னர் கடந்த டிசம்பர் மாதம் 27–ந் தேதி மக்களவையில் ‘முத்தலாக்’ தடை மசோதா மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அப்போதும் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில், மத்திய அரசால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது. தொடர்ந்து மக்களவையின் ஆயுளும் கடந்த மே மாதம் முடிந்தது. இதனால் இந்த மசோதா காலாவதியானது.

இந்தநிலையில், ‘முத்தலாக்’ தடை மசோதா 3–வது முறையாக மக்களவையில், கடந்த ஜூன் மாதம் 21–ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மசோதாவின் மிக முக்கிய அம்சம், தடையை மீறி ‘முத்தலாக்’ நடைமுறையை பின்பற்றும் ஆணுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டிருப்பதுதான்.

நேற்று இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசும்போது, ‘‘முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்த பின்னரும், பெண்கள் அதே நடைமுறையை பின்பற்றி விவாகரத்து செய்யப்படுகிறபோது, ஆண், பெண் சமத்துவத்துக்கும், நீதிக்கும் இந்த மசோதா கண்டிப்பாக தேவை’’ என குறிப்பிட்டார்.

அது மட்டுமின்றி, ‘‘பாகிஸ்தான், மலேசியா உள்பட 20 முஸ்லிம் நாடுகளில் முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கிறபோது, மதச்சார்பற்ற நமது நாட்டில் நாம் ஏன் முத்தலாக்கை தடை செய்யக்கூடாது?’’ என கேள்வி எழுப்பினார்.

ஆனால் புரட்சிகர சோசலிஸ்டு கட்சி எம்.பி. என்.கே.பிரேமசந்திரா, முஸ்லிம் சமூகத்தினரை குறிவைத்து உள்நோக்கத்துடன், பாரதீய ஜனதா கட்சியின் அரசியல் செயல் திட்டத்தின்கீழ் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக சாடினார். இந்து, கிறிஸ்தவ மதங்களில் விவாகரத்துக்கு தண்டனை இல்லை என்கிறபோது, இந்த மசோதா முஸ்லிம் பெண்களைப் பாதுகாப்பதற்கு அல்ல; முஸ்லிம் கணவர்களுக்கு தொல்லை கொடுப்பதற்குத்தான் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் குறை கூறினார்.

காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவித் பேசும்போது, முஸ்லிம் ஆண்களை சிறைக்கு அனுப்பும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

இந்த மசோதாவை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முகமது ஜாவித்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரதீய ஜனதா பெண் எம்.பி. மீனாட்சி லேகி பேசினார். அவர் இந்த சட்டம், பாரதீய ஜனதா கட்சியின் செயல் திட்டம் அல்ல; நாட்டின் செயல்திட்டம். பிரதமர் நரேந்திரமோடி ஒரு இந்துவாக இருந்து கொண்டு, முஸ்லிம்களைப்பற்றி சிந்திப்பதை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த சட்டத்தால் இஸ்லாமிய மதம் ஆபத்தில் இருக்கிறது என்று சில உறுப்பினர்கள் கூறுவது முற்றிலும் தவறானது என கூறினார்.

தொடர்ந்து மீனாட்சி லேகி பேசும்போது, ‘‘நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மையினர் பெண்கள்தான், அவர்களுக்கு பாலின நீதியை நாம் கொடுப்போம்’’ என்று கூறினார்.

பாரதீய ஜனதாவின் கூட்டணிக்கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் இந்த மசோதாவுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டது. அதன் உறுப்பினர் ராஜீவ் ரஞ்சன்சிங் பேசுகையில், ‘‘எங்கள் கட்சி இந்த மசோதாவை ஆதரிக்கவில்லை. இது சமூகத்தின் மனங்களில் நம்பிக்கையின்மையை உருவாக்கும். முஸ்லிம் சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதுதான் அரசு செய்ய வேண்டிய பணி’’ என்று கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியபோது, ‘‘1996–ல் இருந்து எங்கள் கட்சி பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து வருகிறது. இடையில் சில ஆண்டுகள் இல்லாமல் போனாலும், இப்போது கூட்டணியில் இருக்கிறது. சர்ச்சைக்குரிய விவகாரங்களில் அரசை ஆதரிக்க மாட்டோம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம். இந்த மசோதாவை நாங்கள் புறக்கணிக்கிறோம்’’ என கூறி தனது கட்சியினருடன் வெளிநடப்பு செய்தார்.

சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசம்கான் பேசும்போது, பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர் ஒருவரை பார்த்து சில கருத்துகளை கூறினார். அப்போது சபையை வழிநடத்திய பாரதீய ஜனதா உறுப்பினர் ரமாதேவி, அவரை சபாநாயகர் இருக்கையை நோக்கி பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அப்போது அசம்கான், அவரைப் பற்றி சர்ச்சைக்கு இடம் அளிக்கிற வகையில் விமர்சித்தார். இது சர்ச்சைக்கு வழிவகுத்தது.

மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத்தும், அர்ஜூன் ராம் மேக்வாலும், அசம்கானை மன்னிப்பு கேட்குமாறு கூறுங்கள் என்று ரமாதேவியிடம் கூறினர். அதை ரமா தேவி கூறியபோது அசம்கான், ‘‘நான் உங்களை அவமரியாதையாக கூறவில்லை. நீங்கள் என் அன்பு சகோதரி மாதிரி’’ என்றார். அவரது கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவும், அசம்கானுக்கு ஆதரவாக எழுந்தார்.

அப்போது சபாநாயகர் ஓம்பிர்லா வந்து தனது இருக்கையில் அமர்ந்து இரு தரப்பையும் கவனித்தபோது, தனக்கு பேச வாய்ப்பு தரவில்லை என்று கூறி பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி வெளிநடப்பு செய்தார்.

என்னை அவமதிக்கிறபோது நான் பேச முடியாது என்று சொல்லி அசம்கானும் வெளியேற, சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் என இரு கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

மசோதாவை ஆதரித்து, மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி பேசினார். அவர், ‘‘இந்த மசோதா, அரசியல் சாசனத்தின் அர்ப்பணிப்பு; முஸ்லிம் பெண்களுக்கு உரிமை அளிக்கும் நோக்கத்தை கொண்டது. எந்த அழுத்தத்துக்கும் இடம் தராமல் அனைவரும் மசோதாவை ஆதரிக்க வேண்டும். இந்த நாடு அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இயங்குகிறது. இந்த நாடு ‌ஷரியத் சட்டத்தின் அடிப்படையிலோ, பிற மத சட்டங்களின் அடிப்படையிலோ இயங்கவில்லை. எந்த மதத்தாலும் இந்த நாடு வழிநடத்தப்படவில்லை’’ என உறுதிபட கூறினார்.

‘‘கணவன் சிறைக்கு போய் விட்டால், மனைவியையும், குடும்பத்தையும் யார் கவனிப்பார்கள் என்று இங்கே கேள்வி கேட்கிறார்கள். நான் கேட்கிறேன், சிறைக்கு போகிற வகையில், நீங்கள் ஏன் அந்த செயலை செய்ய வேண்டும்?’’ எனவும் வினவினார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதன் உறுப்பினர் மிதுன் ரெட்டி பேசும்போது, ‘‘தற்போதைய வடிவில் இந்த மசோதாவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். ஆண்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை என்பது மிகவும் ஆட்சேபகரமானது’’ என கூறினார். அதே கருத்தை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதிப் பந்தோபாத்யாய் எதிரொலித்தார். அத்துடன் மசோதாவை கூட்டு தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என கோரினார்.

மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் சோனியா காந்தி தலைமையில் வெளிநடப்பு செய்ய, தி.மு.க. உறுப்பினர்களும் அவர்களை பின்தொடர்ந்தனர்.

‘முத்தலாக்’ கூறி விவாகரத்து செய்தால் ஆண்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை என்ற பிரிவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.

இறுதியில் மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 302 பேரும், எதிராக 78 பேரும் வாக்களித்தனர். பெரும்பான்மையினர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் இந்த மசோதா நிறைவேறியது. அதுவும் 2017, 2018, 2019 என 3 ஆண்டுகளில் தலா ஒரு முறை நிறைவேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து இந்த மசோதா, மாநிலங்களவைக்கு செல்லும். அங்கு நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இந்த கூட்டத்தொடரிலேயே மாநிலங்களவையிலும் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.