மக்களவையில் கம்பெனிகள் திருத்த மசோதா நிறைவேறியது - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு


மக்களவையில் கம்பெனிகள் திருத்த மசோதா நிறைவேறியது - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 26 July 2019 9:45 PM GMT (Updated: 26 July 2019 8:55 PM GMT)

எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக்கு மத்தியில், மக்களவையில் கம்பெனிகள் திருத்த மசோதா நிறைவேறியது.

புதுடெல்லி,

கார்பரேட் நிறுவனங்களின் சமூக கடமையை வலுவாக்கவும், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாய வழக்குகளை குறைக்கவும் வகைசெய்யும் கம்பெனி திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு பதிலாக உருவாக்கப்பட்ட இந்த மசோதா மூலம் கம்பெனிகள் சட்டம் 2013-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த மசோதாவை நிதி மற்றும் கார்பரேட் நலத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த மசோதா மூலம் கம்பெனிகளின் பொறுப்புணர்வு உறுதி செய்யப்படுவதுடன், கார்பரேட் நிர்வாக வழிமுறைகள் வலுவாக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.

முன்னதாக இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கம்பெனிகள் சட்டம் ஏற்கனவே பலமுறை திருத்தப்பட்டு உள்ளதால், இந்த மசோதா தேவையில்லை என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார். மத்திய அரசு அவசர சட்ட வழிமுறைக்கு அடிமையாகி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த மசோதா மூலம் கம்பெனிகளின் பதிவாளர்களுக்கு வானளாவிய அதிகாரம் கிடைக்கும் எனவும், இது நல்லதல்ல என்றும் தி.மு.க. உறுப்பினர் ஆ.ராசா கூறினார். இந்த மசோதாவை பேரழிவு என பிஜூ ஜனதாதளம் வர்ணித்தது.

Next Story