மும்பையில் வெள்ளத்தில் சிக்கிய ரெயில்; 500 பயணிகள் மீட்பு


மும்பையில் வெள்ளத்தில் சிக்கிய ரெயில்; 500 பயணிகள் மீட்பு
x
தினத்தந்தி 27 July 2019 7:59 AM GMT (Updated: 27 July 2019 7:59 AM GMT)

மும்பையில் வெள்ளத்தில் சிக்கிய ரெயிலில் இருந்து 500 பயணிகள் மீட்கப்பட்டு உள்ளனர்.

மகாராஷ்டிராவில் கடந்த மாத இறுதியில் பருவமழை தீவிரம் அடைந்தது.  இதில் தொடர்ந்து 5 நாட்கள் மழை கொட்டி தீர்த்தது. அப்போது, மலாட் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 31 பேர் பலியானார்கள். அதன்பின்னர் இயல்பு நிலை திரும்பியிருந்தது.  மும்பை மற்றும் புறநகரில் நேற்று மீண்டும் கனமழை பெய்தது.  நாள் முழுவதும் பெய்த மழையால் மும்பை நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

கனமழையால் ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்படைந்தது.  வெளுத்து வாங்கிய மழையால் ரெயில் தண்டவாளங்களிலும் தண்ணீர் சூழ்ந்தது. பட்லாப்பூர் ரெயில் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் அந்த மார்க்கத்தில் ரெயில்கள் நிறுத்தப்பட்டன.

கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களும், புறப்படும் விமானங்களும் தாமதமாக வந்து சென்றன. தொடர்ந்து மழை பெய்ததால் 17 விமானங்கள் வேறு நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில், 2 ஆயிரம் பயணிகளை ஏற்றி சென்ற மும்பை-கோலாப்பூர் மகாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வான்கனி மற்றும் பத்லாப்பூர் இடையே நிற்கிறது.  இந்த ரெயிலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 700 பயணிகள் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் ரெயில் சிக்கியுள்ள பகுதிக்கு, தேசிய பேரிடர் பொறுப்பு படை, ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் நகர போலீசார் விரைந்துள்ளனர். 3 படகுகளில் பேரிடர் மீட்பு படையினரும் அந்த இடம் நோக்கி விரைந்துள்ளனர்.  வெள்ளத்தில் சிக்கிய ரெயிலில் இருந்து இதுவரை 500 பயணிகளை தேசிய பேரிடர் பொறுப்பு படையினர் மீட்டு உள்ளனர்.

Next Story