காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம்; கூடுதல் ராணுவத்தினர் குவிப்பு


காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம்; கூடுதல் ராணுவத்தினர் குவிப்பு
x
தினத்தந்தி 28 July 2019 6:23 AM GMT (Updated: 28 July 2019 6:23 AM GMT)

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாத தாக்குதலை தடுக்க கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பொன்பஜார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.  இதனடிப்படையில் அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் வீரர்கள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி தாக்குதல் நடத்தினர்.  இதற்கு பதிலடியாக படை வீரர்களும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர்.  நேற்று முன்தினம் இரவு முதல் நடந்த இந்த தாக்குதல் தொடர்ந்து நேற்று காலையிலும் நீடித்தது.  இந்த சண்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தளபதியான முக்கிய பயங்கரவாதி முன்னா லகோரி என தெரிய வந்துள்ளது.  பீகாரை சேர்ந்தவரான இவர் காஷ்மீரில் பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டதற்கு பின்னணியாக இருந்துள்ளார்.

இதனிடையே, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு இயங்கும் பயங்கரவாத குழுக்கள் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளது என ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.

காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை பற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.  இதனை தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அங்கு கூடுதல் படைகள் குவிக்க முடிவானது.  இதன்பேரில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாத தாக்குதலை தடுக்க 100 கம்பெனி துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.  

Next Story